அவுஸ்திரேலியாவில் சாலை விபத்தில் இந்திய மாணவர் மரணம்
அவுஸ்திரேலியாவில் தங்கி படித்து வந்த இந்திய மாணவர் சாலை விபத்தில் உயிரிழந்தார்.
அவுஸ்திரேலியாவில் படித்து கொண்டே வேலை செய்துவந்த 21 வயதான குணால் சோப்ரா (Kunal Chopra), பணி முடிந்து காரில் வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தபோது, லொறி ஒன்றின் மீது மோதி விபத்தில் சிக்கினார். பயங்கரமான இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
இந்த விபத்து கடந்த வாரம், அதிகாலை 7 மணியளவில் நடந்துள்ளது. குணால் சோப்ரா தவறான பாதையில் சென்றதே விபத்துக்கான காரணம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்து குறித்து அவுஸ்திரேலியாவின் சாலை பாதுகாப்பு பொலிஸார், சோப்ராவின் விபத்து பற்றி தொடர்ந்து விசாரணை நடந்து வருவதாக தெரிவித்தனர்.
Credit: ACT Police/Honey Malhotra
கேன்பெர்ரா நகரில் இந்த வருடத்தில் நடந்த முதல் விபத்து என கூறப்படுகிறது.
குணால் சோப்ரா இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் ஹோசியார்ப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். அவர் கடந்த ஆண்டு பிப்ரவரியில் மாணவர் விசாவில் அவுஸ்திரேலியாவுக்கு சென்றுள்ளார்.
குணால் சோப்ராவின் உடலை இந்தியாவுக்கு கொண்டு வர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவரும் நிலையில், அவரது மறைவு செய்தியை அவுஸ்திரேலியாவில் உள்ள எஸ்.பி.எஸ். பஞ்சாபி என்ற ஊடகம் வெளியிட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவில் கடந்த சில நாட்களுக்கு முன் இந்திய வம்சாவளியான 4 பேர் சாலை விபத்தில் உயிரிழந்த நிலையில், இந்த சோக சம்பவம் நடந்து உள்ளது.