கனடாவில் நிலவும் மோசமான சூழல்: படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு இந்தியா திரும்பிய இளம்பெண்
பெரும்பாலான சர்வதேச மாணவர்களைப்போலவே, கனடாவில் கல்வி கற்கும் கனவுடன் புறப்பட்டார் இந்திய இளம்பெண் ஒருவர்.
ஆனால், அங்கு நிலவும் மோசமாக சூழலைக் கண்டு, படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு இந்தியாவுக்குத் திரும்பிவிட்டார் அவர்.
வீட்டு வாடகை என்ற பெயரில் ஒரு கொள்ளை
மருத்துவ மேலாண்மையில் முதுகலை பட்டயப்படிப்பு படிப்பதற்காக, 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், கனடாவிலுள்ள Cape Breton பல்கலையில் இணைந்தார் விருந்தா (Vrinda Kathore).
WION Web Team
அவர் ஏப்ரலில் பல்கலையில் சேரும்போது அவருடன் 500 மாணவர்கள் இருந்த நிலையில், அந்த எண்ணிக்கை செப்டம்பரில் 3,500ஆக உயர்ந்ததாக குறிப்பிடுகிறார்.
அதுதான், வீட்டு உரிமையாளர்கள் காசு பார்க்கும் நேரம் என்று கூறும் விருந்தா, பணவீக்கமும் அதிகமாக இருக்க, வீட்டு உரிமையாளர்கள் மாணவர்களை வைத்து காசு பார்க்கத் துவங்கியதாகவும், 2023 ஜனவரியில், வீட்டு வாடகைகள் எக்கச்சக்கமாக உயர்ந்ததாகவும், இப்படி மாணவர்களிடம் கொள்ளையடிக்கும் மோசமான வீட்டு உரிமையாளர்களைக் கேட்க யாரும் இல்லை என்றும் கூறுகிறார்.
சினிமா தியேட்டரில் வகுப்புகள்
எக்கச்சக்கமாக மாணவர்களை கல்லூரிகளில் அனுமதித்துவிட்டு, அவர்களுக்கு கற்பிக்க சரியான உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததால், சினிமா தியேட்டர்களில் பிள்ளைகளுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கிறார் விருந்தா.
காலையில் வகுப்புகள், மாலையில் மக்கள் படம் பார்க்க தியேட்டர் என மாறி மாறி நடந்ததாகவும், தனது முதல் செமஸ்டரை தான் தியேட்டரில்தான் கற்றதாகவும் தெரிவிக்கிறார் அவர்.
மருத்துவ வசதிகள் இல்லை
கனடாவில், மருத்துவமனைகள் அனைத்துமே அரசாங்கத்தால் நடத்தப்படுவதால், தனியார் மருத்துவமனைகள் இல்லை என்று கூறும் விருந்தா, ஆகவே, அவசர சிகிச்சைகள் பெறுவது கடினம் என்றும், ஒரு குடும்ப மருத்துவரைக் காண இரண்டு ஆண்டுகள் வரை காத்திருக்கும் நிலைமை கூட உள்ளதாகவும் தெரிவிக்கிறார்.
சின்ன வேலைகளுக்கு அமர்த்தப்படும் இந்தியர்கள்
கனடாவில் கல்வி கற்கச் செல்லும்போது, அங்கு படிக்கும்போதே வேலை பார்க்கலாம் என்றும், படித்து முடித்ததும் பல்கலைக்கழகங்கள் வேலைக்கு ஏற்பாடு செய்து தரும் என்றும், நல்ல வருமானம் கிடைக்கும் என்றும், ஏராளமான விளம்பரங்கள் செய்யப்படுகின்றன.
ஆனால், வேலை பெற்றுத் தருவதில் பல்கலைக்கழகங்கள் உதவுவதில்லை என்று கூறுகிறார் விருந்தா. வேலை வேண்டுமானால், கனேடிய பணி அனுபவம் வேண்டும். ஆனால், இந்தியர்களுக்கு காஃபி ஷாப்பில் வேலை, ஆயா வேலை என சின்னச் சின்ன வேலைகள்தான் கிடைக்கின்றன, அதை வைத்து என்ன அனுபவத்தைப் பெறுவது?
ஆக, படித்து முடித்துவிட்டு, 7 முதல் 8 ஆண்டுகள் வரை கனடாவில் வேலை பார்க்கவேண்டும் என்ற ஆசையில் கனடாவுக்குச் சென்ற விருந்தா, படிப்பைக் கூட முடிக்காமல், செப்டம்பர் மாதம் இந்தியாவுக்குத் திரும்பிவிட்டார்.
இப்படி கனடாவிலிருந்து பாதியிலேயே திரும்புபவர்கள் குறித்து வெளியாகும் முதல் செய்தி அல்ல இது. ஏற்கனவே, படிக்க மட்டும் அல்ல, வேலைக்குச் சென்ற பலரும், கனடாவில் வீட்டு வாடகை, விலைவாசி போன்ற பிரச்சினைகளை சமாளிக்க முடியாமல் பாதியிலேயே சொந்த நாடு திரும்பிவரும் பல செய்திகள் வெளியாகிவருகின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |