கனடாவில் கல்வி கற்க விண்ணப்பிக்கும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை கடும் சரிவு: காரணங்கள்
கனடாவில் கல்வி கற்பதை கனவாக கொண்டிருந்த இந்திய மாணவ மாணவியரின் எண்ணங்களில் மாற்றங்கள் உருவாகியுள்ளதைக் கண்கூடாக காணமுடிகிறது.
2023ஆம் ஆண்டின் இரண்டாவது பாதியில், கனடாவில் கல்வி கற்க விண்ணப்பித்துள்ள மாணவ மாணவியரின் எண்ணிக்கை 40 சதவிகிதம் குறைந்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது.
40 சதவிகிதம் குறைவு
கனேடியர் ஒருவர் கனடாவில் கொல்லப்பட்டதன் பின்னணியில் இந்தியா இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து இருநாடுகளுக்குமிடையிலான தூதரக உறவில் பாதிப்பு ஏற்பட்டது.
ஆனால், கனடாவில் கல்வி கற்க விண்ணப்பிக்கும் மாணவ மாணவியரின் எண்ணிக்கை குறைந்ததற்கு அது காரணம் அல்ல!
ஏனென்றால், கடந்த ஆண்டு ஜூலை முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்திலேயே கனடாவில் கல்வி கற்க விண்ணப்பிக்கும் மாணவ மாணவியரின் எண்ணிக்கை குறைந்துவிட்டது.
கடந்த ஆண்டு, அதாவது, 2022ஆம் ஆண்டு இந்த காலகட்டத்தில் கனடாவில் கல்வி கற்பதற்காக 145,881 இந்திய மாணவ மாணவியர் விண்ணப்பித்திருந்த நிலையில், இந்த ஆண்டு, அதாவது, 2023ஆம் ஆண்டு, ஜூலை முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில், 86,562 பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளார்கள். இது கொஞ்சமல்ல, 40 சதவிகிதம் குறைவாகும்.
காரணம் என்ன?
கனடாவில் கல்வி கற்கலாம் என்ற ஆசையில் சென்ற மாணவ மாணவியர் பலர், தாங்கள் அங்கு அனுபவிக்கும் கஷ்டங்களை சமூக ஊடகங்கள் வாயிலாக பகிர்ந்துவருகிறார்கள்.
குறிப்பாக, வீட்டு வாடகை, விலைவாசி உயர்வு மற்றும் தங்களுக்கு வாக்களிக்கப்பட்ட விடயங்கள் மறுக்கப்பட்டதால் ஏற்பட்ட ஏமாற்றம் முதலான விடயங்களை அவர்கள் தொடர்ந்து பகிர்ந்துவருகிறார்கள்.
முந்திக்கொண்ட அமைச்சர்கள்
நடப்பதை உற்று கவனித்து வந்த கனடா அமைச்சர்கள், அதாவது ஜூலை முதலே இந்திய மாணவர்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கியதை மக்கள் கவனிக்கும் முன் கவனித்த அரசியல்வாதிகள், தாங்கள் அவமானப்பட இருப்பதை தவிர்க்கவே, போலியாக, கனடாவில் வீடுகள் பற்றாக்குறைக்கு சர்வதேச மாணவர்கள் காரணம் என்றும், ஆகவே, சர்வதேச மாணவர்கள் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தவேண்டும் என்றும், முந்திக்கொண்டு வெற்று அறிக்கை விடுத்துள்ளார்கள் என்கிறது Hindustan Times ஊடகம்.
ஆக, கனடாவில் கல்வி கற்க விரும்பும் இந்திய மாணவ மாணவியரின் ஆர்வம் குறைந்துள்ளது கனடாவுக்கு நஷ்டம்தான் என்பது தெள்ளத்தெளிவாகிறது.
கோவிட் காலகட்டத்துக்குப் பிறகு கனடாவில் கல்வி கற்க விண்ணப்பிக்கும் இந்திய மாணவ மாணவியரின் எண்ணிக்கை இந்த அளவுக்கு சரிந்துள்ளது இதுவே முதல் முறையாகும். இதற்கிடையில், இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையிலான தூதரக உறவில் உருவாகியுள்ள பிரிவும் சேர்ந்துகொள்ள, நிலைமை மேம்பட வாய்ப்பில்லை என்கிறார்கள் அரசியல் நிபுணர்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |