சீட்டு கட்டு போல் சரிந்த விக்கெட்டுகள்... 78 ஓட்டங்களில் சுருண்டது இந்திய அணி
இங்கிலாந்து அணிக்கெதிரான 3-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 78 ஓட்டங்கள் மட்டுமே எடுத்துள்ளது.
இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லி துடுப்பாட்டம் தெரிவு செய்தார்.
அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் ஷர்மா, லோகேஷ் ராகுல் களமிறங்கினர். முதல் ஓவரை ஆண்டர்சன் வீசினார். அந்த முதல் ஓவரிலேயே இந்தியாவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
லார்ட்ஸ் டெஸ்ட்டில் சதம் அடித்து அசத்திய லோகேஷ் ராகுல், முதல் ஓவரிலேயே ஆண்டர்சனிடம் ரன் ஏதும் எடுக்காமல் கேட்ச் ஆகி வெளியேறினார். இதனால், புஜாரா 2வது ஓவரிலேயே களமிறங்கினார்.
தான் சந்தித்த 10 பந்துகளில் புஜாரா, ஒரேயொரு ரன் மட்டும் எடுத்து அவுட்டானார். இதன் பின்னர் களமிறங்கிய கேப்டன் விராட் கோஹ்லி அணியை மீட்டுக்கொண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில் அவரும் ஏமாற்றத்தையே கொடுத்தார்.
ஆண்டர்சன் வீசிய பந்தில் 7 ரன்களுக்கு கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 3வது விக்கெட்டிற்கு களமிறங்கிய அஜிங்கியா ரகானே, 18 ஓட்டங்களுக்கும், அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ரிஷப் பண்ட் 2 ரன்களுக்கும் வந்த வேகத்தில் நடையை கட்டினர்.
மறுமுணையில் நீண்ட நேரமாக பார்ட்னர்ஷிப் அமைக்க போராடி வந்த ரோகித் சர்மா 105 பந்துகளை சந்தித்து 19 ரன்களுக்கு வெளியேறினார். ரவீந்திர ஜடேஜா 4 ரன்கள், இஷாந்த் சர்மா 0, பும்ரா 0, முகமது சிராஜ் 2 ரன்களும் எடுத்து அடுத்தடுத்து பெவிலியன் நோக்கி நடையை கட்டினர்.
இதனால் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 78 ஓட்டங்களுக்கு ஆல் அவுட்டானது.
இங்கிலாந்து தரப்பில் ஆண்டர்சன், ஓவர்டேன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் ராபின்சன், சாம் கரன், தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.