லண்டனுக்கு பறக்கும் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள்! குடும்பத்தினரை அழைத்து செல்ல இங்கிலாந்து அரசு அனுமதி
இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு குடும்பத்தாரையும் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் அழைத்து வரலாம் என இங்கிலாந்து அரசு அனுமதி கொடுத்துள்ளது.
நியூசிலாந்துக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியினர் மும்பையில் இருந்து தனிவிமானத்தில் இன்று லண்டனுக்கு புறப்படுகிறார்கள்.
மிதாலிராஜ் தலைமையிலான இந்திய பெண்கள் அணியினரும் சர்வதேச போட்டியில் ஆடுவதற்காக இதே விமானத்தில் இங்கிலாந்துக்கு பயணிக்கிறார்கள்.
தற்போது மும்பையில் 14 நாட்கள் தனிமைப்படுத்துதலில் உள்ள இந்திய வீரர்கள் இங்கிலாந்து சென்றதும் மறுபடியும் தனிமைப்படுத்தப்படுவார்கள்.
வீரர்களுடன் அவர்களது குடும்பத்தினரையும் அழைத்து செல்ல அனுமதிக்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் வேண்டுகோள் விடுத்திருந்தது.
கெரோனா பரவலால் கடுமையான விதிமுறைகள் பின்பற்றப்படும் சூழலில் வீரர்களுடன் மனைவி, குழந்தைகள் உடன் இருக்கும் போது மனதளவில் புத்துணர்ச்சியுடன் இருக்க முடியும்.
இதையடுத்து இந்தியாவின் கோரிக்கையை இங்கிலாந்து அரசாங்கம் ஏற்றுக்கொண்டு உள்ளது.
இதன்படி வீரர்களும், பயிற்சி உதவியாளர்களும் தங்களது குடும்பத்தினரை உடன் அழைத்து செல்ல முடியும்.