அவுஸ்திரேலிய அணி வீரர்களை தண்ணி குடிக்க வைத்த இந்திய அணி வீரர்கள்! திறமையாக செயல்பட்டதாக பாராட்டிய இலங்கை வீரர்
அவுஸ்திரேலிய அணியுடனான சிட்னி டெஸ்ட்டில் திறமையாக விளையாடி இந்திய வீரர்கள் போட்டியை டிரா செய்த நிலையில் அவர்களை இலங்கை முன்னாள் வீரர் திலன் சமரவீர பாராட்டியுள்ளார்.
இந்தியா - அவுஸ்திரேலிய அணிகள் இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 338 ரன்களுக்கும், இந்திய அணி 244 ரன்களுக்கும் ஆட்டமிழந்தன.
94 ரன்கள் முன்னிலை பெற்று 2-வது இன்னிங்ஸை ஆடிய அவுஸ்திரேலிய அணி 6 விக்கெட் இழப்புக்கு 312 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது.
இந்திய அணி 2-வது இன்னிங்ஸில் 5 விக்கெட் இழப்புக்கு 334 ரன்கள் சேர்த்திருந்தபோது ஆட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது. அஸ்வின் 128 பந்துகள் சந்தித்து 39 ரன்களுடனும், விஹாரி161 பந்துகள் சந்தித்து 23 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
இந்திய அணி 131 ஓவர்கள் வரை நின்று5 விக்கெட் இழப்புக்கு 334 ரன்கள் குவித்து டிரா செய்தது.
407 ரன்கள் எனும் இமாலய இலக்கை துரத்திய இந்திய அணிக்கு கடைசி நாளான நேற்று அவுஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் பாடிலைன் பந்துவீச்சை வீசுவார்கள், பவுன்ஸர்களைத் தாக்குப்பிடிப்பது கடினம் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வென்றால் சிறப்பு இல்லாவிட்டாலும் டிரா செய்தாலே அதிசயம் என கூறப்பட்டது. அதற்கேற்றார் போல விக்கெட்டை பறிகொடுக்காமல் விளையாடி இந்திய அணி டிரா செய்தது, அவுஸ்திரேலிய வீரர்கள் எவ்வளோ வெற்றி பெற முயற்சி செய்தும் இந்திய வீரர்கள் தங்களின் திறமையான துடுப்பாட்டம் மூலம் அதற்கு முட்டுகட்டை போட்டனர்.
இது குறித்து இலங்கை அணி முன்னாள் வீரர் திலன் சமரவீரா டுவிட்டரில், டெஸ்ட் கிரிக்கெட் மிகச்சிறந்ததாக நிரூபிக்கப்பட்டுள்ளது. காயமடைந்த ஒரு சில வீரர்களுடன் நான்காவது இன்னிங்ஸில் இந்தியா சிறப்பாக செயல்பட்டதற்கு பாராட்டுகள் என தெரிவித்துள்ளார்.