இந்திய அணியின் அடுத்த கேப்டனாக இவருக்கே அதிக வாய்ப்பு...அடித்து கூறும் யுவராஜ்சிங்
இந்திய அணியின் முன்னாள் வீரரான யுவராஜ் சிங், டோனியைப் போன்று அடுத்து ஒரு கேப்டன் யார் என்பது குறித்து பேசியுள்ளார்.
டோனி தலைமையிலான இந்திய அணி, பல சாதனைகளை படைத்துள்ளது. குறிப்பாக டி20 மற்றும் ஒருநாள் உலகக்கோப்பை தொடரை வென்று கொடுத்துள்ளது.
ஆனால், அவர் போன பின்பு இந்திய அணி அந்தளவிற்கு பெரிய எந்த ஒரு ஐசிசி தொடரையும் கைப்பற்றவில்லை. இதனால் டோனிப் போன்று ஒரு வீரர் கிடைக்கமாட்டாரா? என்று ரசிகர்கள் பலரும் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரரான யுவராஜ்சிங் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக திகழும் ரிஷப் பன்ட்டிற்கு எதிர்கால இந்திய அணியை வழிநடத்தும் கேப்டன் பொறுப்பிற்கான அனைத்து தகுதிகளும் உள்ளது என்று கூறியுள்ளார்.
இது குறித்து அவர் தொடர்ந்து கூறுகையில், கடந்த ஆண்டு நடைபெற்ற அவுஸ்திரேலியா அணிக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடருக்கு முன்பு வரை தனது மோசமான ஆட்டத்தினால் ரசிகர்களின் விமர்ச்சனத்திற்கும், அதிருப்திக்கும் உள்ளான ரிஷப் பன்ட், அந்த தொடரில் அற்புதமாக விளையாடி தனது திறமையை நிரூபித்துக் காட்டினார்.
இந்த ஆண்டு நடைபெற்ற இங்கிலாந்துக்கு அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கீப்பிங் மற்றும் பேட்டிங் என இரண்டிலுமே சிறப்பாக செயல்பட்ட அவருக்கு, ஒருநாள் மற்றும் டி20 கொண்ட போட்டிகளிலும் இந்திய அணிக்காக விளையாடும் வாய்ப்பு வழங்கப்பட்டது.
அந்த போட்டிகளிலும் சிறப்பாக விளையாடிய அவர், இந்திய அணியில் நிரந்தரமான இடத்தைப் பிடித்ததோடு மட்டுமல்லாமல் தவிர்க்க முடியாத வீரராகவும் உருவெடுத்துள்ளார்.
கிட்டத்தட்ட இந்திய அணியில் இருந்து நீக்கப்படும் சூழ்நிலைக்கு சென்று மீண்டும் தனது அபார திறமையை வெளிக்காட்டி உள்ளார். ஒரு விளையாட்டு வீரர் எப்போதும் அவருடைய விளையாட்டில் ஏற்ற இறங்கங்களை சந்தித்தே வருவார்.
ரிஷப் பாண்ட் அதுபோல ஒரு சரிவில் இருந்து தனது கடின உழைப்பால் மீண்டும் தனது திறமையை நிரூபித்துள்ளார். இது அவரை ஒரு மிக முக்கியமான வீரராக மாற்றியுள்ளது.
அதுமட்டுமின்றி ஒரு கேப்டனாக எப்படி செயல்பட வேண்டும் என்பதை ஐபிஎல் தொடரில் இருந்தும் கற்றுக் கொண்டுள்ளார்.
எனவே அவர்தான் இந்திய அணியின் அடுத்த கேப்டனாக இருப்பார் என்று நான் நினைப்பதாக கூறியுள்ளார்.