பிரித்தானியாவில் இந்திய வம்சாவளி இளைஞரின் கொடுஞ்செயல்: தற்காப்புக்கு என கதறல்
பிரித்தானியாவில் மதுபான விடுதிக்கு வெளியே ஏற்பட்ட தகராறில் இருவரை கத்தியால் குத்திய இந்திய வம்சாவளி இளைஞர் ஆயுள் தண்டனையை எதிர்கொள்கிறார்.
வியாழக்கிழமை ஷெஃபீல்ட் கிரவுன் நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் அம்ரித் ஜாக்ரா என்ற 19 வயது இந்திய வம்சாவளி இளைஞர் தம்மீது சுமத்தப்பட்டுள்ள கொலை வழக்கை மறுத்துள்ளார்.
தற்காப்புக்காக தாக்குதலில் ஈடுபட்டதாகவும் கதறியுள்ளார். ஆனால் அவரது வாதங்களை ஏற்கமறுத்த நீதிமன்றம் அவரை குற்றவாளி என அறிவித்துள்ளது.
கடந்த ஜனவரி மாதம் டான்காஸ்டரில் உள்ள மதுபானக்கு வெளியே ஏற்பட்ட தகராறில் Janis Kozlovskis(17) மற்றும் Ryan Theobald(20) ஆகிய இருவரும் கொல்லப்பட்டனர்.
இந்த வழக்கின் விசாரணை முழுக்க, தற்காப்புக்காகவே கத்தியை பயன்படுத்தியதாக அம்ரித் ஜாக்ரா கூறி வந்துள்ளார். ஆனால் சம்பவத்தன்று கத்தியுடன் ஒருவர் பொதுவெளிக்கு சென்றுள்ளதும், ஒருவரை அல்ல இருவரை கத்தியால் தாக்கி கொலை செய்துள்ளதும், அதிகரித்துவரும் கத்திக்குத்து தாக்குதல் சம்பவத்தின் ஒருபகுதி தான் என சட்டத்தரணிகள் வாதிட்டுள்ளனர்.
சம்பவத்தின் போது ஜாக்ராவின் நண்பருக்கும் கோஸ்லோவ்ஸ்கிசுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் நண்பருக்கு ஆதரவாக தியோபால்டும் களமிறங்க, ஆத்திரத்தில் ஜாக்ரா கத்தியால் அவரை கொடூரமாக தாக்கிவிட்டு, தெருவிலேயே விட்டுச் சென்றுள்ளார்.
மட்டுமின்றி கோஸ்லோவ்ஸ்கிசை துரத்திச் சென்று பல முறை கத்தியால் தாக்கியுள்ளார். இதில் சம்பவயிடத்திலேயே தியோபால்ட் மரணமடைய, கோஸ்லோவ்ஸ்கிஸ் மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.
இதனையடுத்து விரைவில் கொலை விசாரணை தொடங்கப்பட்டது. பொலிசார் முன்னெடுத்த விசாரணையில் ஜாக்ரா சம்பவத்தைத் தொடர்ந்து அருகிலுள்ள ஹொட்டலுக்கு தப்பிச் சென்றதாகவும், அங்கிருந்து டாக்ஸி மூலமாக நண்பரின் வீட்டிற்குச் சென்றுவிட்டதாகவும் தெரியவந்தது.
சில நாட்களுக்கு பின்னர் ஜாக்ராவே பொலிசாரிடம் சரணடைந்தார். அவரிடம் இருந்து தொடர்புடைய ஆயுதங்களை கைப்பற்றிய பொலிசார், பிப்ரவரி 3ம் திகதி முறைப்படி கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர்.