கனடாவில் குடியமர விரும்பிய இந்தியர்... தொடர்ந்து ஒத்துழைக்க மறுத்த மனைவிக்கு ஏற்பட்டுள்ள நிலை
எப்படியாவது வெளிநாடு ஒன்றில் குடியமர ஆசைப்பட்ட இந்தியர் ஒருவர், எவ்வளவோ வற்புறுத்தியும் அவரது மனைவி ஒத்துழைக்காததால், மனைவியைக் கைவிட்டுவிட்டார்.
குஜராத்தில் பணியாற்றும் பெண் ஒருவர், மும்பையைச் சேர்ந்த ஒருவரை 2018ஆம் ஆண்டு திருமணம் செய்துள்ளார்.
2019 அப்டோபர் 10 ஆம் திகதி, தம்பதியருக்கு குழந்தை ஒன்று பிறந்துள்ளது. 2020இல், நாம் அமெரிக்காவுக்குச் சென்று குடியேறலாம் என்று தன் மனைவியிடம் கூறியுள்ளார் அந்தக் கணவர். ஆனால், தங்கள் குழந்தை பிறந்து மூன்று மாதங்களே ஆகியுள்ளதால் தன்னால் பயணம் செய்ய முடியாது என்று கூறி மறுத்துள்ளார் அந்தப் பெண்.
இதனால் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட, மனைவியை தாக்கியுள்ளார் கணவர். உடனே அந்தப் பெண் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேற, அவரது உறவினர்களோ சமாதானம் பேசி கணவனையும் மனைவியையும் சேர்த்துவைத்துள்ளார்கள்.
2021 பிப்ரவரி 14ஆம் திகதி தம்பதியருக்கு இரண்டாவது குழந்தை பிறந்துள்ளது. அடுத்த மாதம், நாம் கனடாவுக்குச் சென்று குடியேறலாம் என்னும் தனது ஆசையைத் தெரிவித்துள்ளார் அந்தக் கணவர்.
அப்போதும், தங்களுக்குச் சிறுபிள்ளைகள் இருப்பதால் தன்னால் பயணம் செய்யமுடியாது என அந்தப் பெண் மறுக்க, மீண்டும் சண்டை உருவாக, மனைவியை வீட்டை விட்டு அடித்துத் துரத்தியுள்ளார் அந்தக் கணவர். ஆனால், குழந்தைகளை மனைவியுடன் அனுப்ப அவர் மறுத்துவிட்டாராம்.
தன் பெற்றோர் வீட்டுக்குச் சென்றுவிட்ட அந்தப் பெண், பின்னர் தன் குழந்தைகளை சந்திக்க முயன்றுள்ளார். ஆனால், அவரது கணவரும் அவரது வீட்டாரும் பிள்ளைகளை அவருடன் அனுப்ப மறுத்துவிட்டார்களாம்.
எனவே, பொலிசாரை அணுகிய அந்தப் பெண், தற்போது தன் கணவர் மற்றும் அவரது வீட்டார் மீது குடும்ப வன்முறைப் புகார் ஒன்றை அளித்துள்ளார்.