கனடாவில் இந்தியப் பெண் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம்: குற்றவாளியின் புகைப்படம் வெளியீடு
கனடாவில் இந்தியப் பெண் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில் பொலிசார் குற்றவாளியின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.
சுட்டுக்கொல்லப்பட்ட இந்திய பெண்
2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், Mississauga நகரில் அமைந்துள்ள பெட்ரோல் நிலையம் ஒன்றில், இளம்பெண் ஒருவர் துப்பாக்கியால் சுடப்பட்டுக் கிடந்தார். உடலில் பல இடங்களில் குண்டுபாய்ந்து அவர் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த நிலையில், அவசர உதவிக்குழுவினர் அவரைக் காப்பாற்ற எடுத்த முயற்சிகள் எதுவும் பலனளிக்காமல் அந்தப் பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
பஞ்சாபைச் சேர்ந்த அந்த பெண் கனடாவில் Bramptonஇல் வாழ்ந்துவந்துள்ளார். அவரது பெயர் பவன்பிரீத் கௌர் என பொலிசார் தெரிவித்தனர்.
தனக்கு 18 வயது இருக்கும்போது மாணவர் விசாவில் கனடா வந்த பவன்பிரீத், பின்னர் தனது குடும்பத்தையே கனடாவுக்கு வரவழைக்கத் திட்டமிட்டிருந்தார்.
Express photo
சுட்டுக்கொன்ற நபர்
பவன்பிரீத்தை சுட்டுக்கொன்ற நபர், சம்பவ இடத்திலிருந்து கால்நடையாகவே தப்பிச் சென்றதும், அவர் சிறிது நேரமாகவே அந்த பகுதியில் சைக்கிளில் சுற்றுவதும் CCTV கமெராவில் பதிவாகியுள்ள காட்சியிலிருந்து தெரியவந்தது.
இந்நிலையில், அவரது பெயர் தரம் சிங் ( Dharam Singh Dhaliwal, 30) என்று கூறியுள்ள பொலிசார், அவரது புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளனர்.
Express photo
தலைமறைவான தரம் சிங்கை கைது செய்ய கனடா முழுமைக்குமான வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவர் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும், ஆபத்தானவர் என்றும் எச்சரித்துள்ள பொலிசார், அவரைக் குறித்து தகவல் ஏதாவது தெரிந்தால் தங்களுக்கு உடனடியாகத் தெரிவிக்குமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.
தானாக வந்து சரணடையுமாறு தரம் சிங்கை வலியுறுத்தியுள்ள பொலிசார், அவருக்கு யாராவது உதவினால், அவர்கள் மீதும் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளனர்.