கனடாவுக்கு வர எடுத்த முடிவு சரியானதுதானா?: எட்டு மாத குழந்தையை பிரிந்து தவிக்கும் இந்தியப் பெண்ணின் குழப்பம்
எட்டு மாதக் குழந்தையை பிரிந்து கனடாவில் வாழும் இந்தியப் பெண் ஒருவர், தன் குழந்தையை கனடாவுக்குக் கொண்டு வர எடுத்த முயற்சிகள் பலனளிக்கததால், தான் கனடாவுக்கு வருவது என எடுத்த முடிவே சரியானதா இல்லையா என்னும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளார்.
கனேடிய நிரந்தர வாழிட உரிமம் பெற்றவரான அனு சேகல் (Anu Seghal, 39), ரொரன்றோவில் வாழ்கிறார். 2019ஆம் ஆண்டு நிரந்தர வாழிட உரிமம் பெற்ற அனு, 2020இல் கனடாவுக்கு புலம்பெயர திட்டமிட்டிருந்தார். ஆனால், அதற்கு கோவிட் கட்டுப்பாடுகள் தடையாக வர, அனுவுக்கும் கொரோனா தொற்றியது.
மருத்துவர்கள் அவர் பயணிக்கவேண்டாம் என ஆலோசனை கூறியதால் இந்தியாவிலேயே அவருக்கு பிரசவம் ஆகியுள்ளது. குழந்தையையும் கணவரையும் இந்தியாவில் விட்டு விட்டு மார்ச் மாதம் கனடாவுக்கு வந்து சேர்ந்த அனு, தான் ஏற்கனவே தன் மகனுக்காக தற்காலிக வாழிட உரிமத்துக்கு விண்ணப்பித்திருந்ததால், அது அவர் கனடா வந்து சேரும் நேரத்துக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும் என கணக்குப் போட்டிருந்தார்.
Photo Credit: Anu Seghal
ஆனால், அதற்கு எந்த பதிலும் கிடைக்காததால், தன் மகனுக்காக நிரந்தர வாழிட உரிமத்துக்கு விண்ணப்பித்தால் பதில் கிடைக்க அதிக வாய்ப்பிருக்கலாம் என்று எண்ணி அதையும் விண்ணப்பித்துவிட்டார். ஆனாலும், அவருக்கு பதில் ஏதும் இதுவரை கிடைக்கவில்லை... கருணை அடிப்படையில் அனுவுடைய விண்ணப்பத்துக்கு பதிலளிக்கப்பட்டிருக்கலாம் என்று கூறும் புலம்பெயர்தல் சட்டத்தரணிகள், இதுபோன்ற பிரச்சினைகளால், கனடாவுக்கு புதிதாக புலம்பெயர மக்கள் தயங்கும் நிலை உருவாகக்கூடும் என்கிறார்கள்.
இதற்கிடையில் பெற்ற குழந்தையைப் பிரிந்து தவிக்கும் அனு, மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளார். அதற்காக மாத்திரைகள் சாப்பிடும் நிலை அவருக்கு உருவாகியுள்ளது.
இப்படி பிள்ளையைப் பிரிந்து தானும், தாயைப் பிரிந்து தன் பிள்ளையும் வாடும் ஒரு நிலை ஏற்படும் என்று தெரிந்திருந்தால், கனடாவுக்கு வரும் ஒரு முடிவை எடுக்கும் தைரியம் தனக்கு இருந்திருக்காது என்கிறார் அவர்.