பிரித்தானியாவிலிருந்து நாடுகடத்தப்படும் அபாயத்தில் இந்தியர்: நீதிபதியின் எச்சரிக்கை
கேரளாவைச் சேர்ந்த ஒரு இளைஞர் பிரித்தானியாவில் கல்வி கற்கச் சென்ற நிலையில், ஒரு இளம்பெண்ணுக்குத் தொந்தரவு கொடுத்ததற்காக அவர் நாடுகடத்தப்படலாம் என நீதிபதியால் எச்சரிக்கப்பட்டுள்ளார்.
இளம்பெண்ணுக்குத் தொந்தரவு கொடுத்த இந்தியர்
இந்தியாவின் கேரள மாநிலத்திலிருந்து பிரித்தானியாவுக்கு கல்வி கற்க வந்த ஆசிஷ் ஜோஷ் பால் (26) என்னும் இளைஞர், லண்டன் உயிரியல் பூங்காவிலுள்ள காபி ஷாப்பில் வேலைக்கு சேர்ந்துள்ளார்.
அங்கு அவர் ஒரு இளம்பெண்ணை சந்தித்துள்ளார். அவரை காதலிப்பதாகக் கூறி, தொடர்ந்து ஆறு மாதங்களாக அவருக்கு தொந்தரவு கொடுத்துள்ளார் ஆசிஷ்.
அதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட ஆசிஷை, இனி லண்டன் உயிரியல் பூங்காவிற்குச் செல்லக்கூடாது என்ற நிபந்தனையின்பேரில் அதிகாரிகள் விடுவித்துள்ளனர்.
ஆனால், மறுநாளே அங்கு சென்று அந்த இளம்பெண்ணுக்கு மீண்டும் தொந்தரவு கொடுத்துள்ளார் ஆசிஷ்.
இப்படியே மீண்டும் மீண்டும் கைது செய்யப்பட்டும் அந்த இளம்பெண்ணுக்கு ஆசிஷ் தொடர்ந்து தொந்தரவு கொடுத்ததால், அவருக்கு ஆறு மாத சிறைத்தண்டனை விதித்த நீதிபதி Jas Jandu, 12 மாதங்களில் அவர் மீண்டும் குற்றச்செயல் எதிலாவது ஈடுபட்டால் சிறையில் அடைக்கப்படுவார் என்று எச்சரித்துள்ளார்.
அத்துடன், அந்தப் பெண்ணை தொந்தரவு செய்யக்கூடாது என ஆசிஷை நேரடியாக எச்சரித்த, நீதிபதி, அப்படி அந்தப் பெண்ணுக்கு மீண்டும் தொந்தரவு கொடுத்தால், ஐந்து ஆண்டுகள் வரை அவர் சிறை செல்ல நேரிடலாம் என்றும் எச்சரித்தார்.
மேலும், அடுத்த மாதம், அதாவது 2025ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 13ஆம் திகதி ஆசிஷுடைய விசா காலாவதியாக உள்ளதால், அவருக்கு மீண்டும் விசா கொடுக்கப்படாலொழிய, அவர் நாடுகடத்தப்படும் அபாயத்தில் உள்ளதாகவும் நீதிபதி எச்சரித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |