இந்தியர்களுக்கும் ஆசியர்களுக்கும் வீடு கிடையாது... 375,000 பவுண்டுகள் தர தயாராக இருந்த இந்தியருக்கு கிடைத்த அவமதிப்பு
பிரித்தானியாவில் வீடு ஒன்றிற்கு 375,000 பவுண்டுகள் கொடுத்து அதை வாங்கத் தயாராக இருந்த இந்தியர் ஒருவருக்கு, வீட்டைக் காட்டக்கூட மறுத்துள்ளார் பிரித்தானிய பெண்மணி ஒருவர்.
பிரித்தானியாவில் பிறந்த இந்தியர்களான சரீனா சுமன் (34), அஜய் (33) தம்பதியர், பெரிய வீடு ஒன்றைத் தேடிக்கொண்டிருந்திருக்கிறார்கள்.
அப்போது, அவர்கள் நீண்ட காலமாக வசித்துவரும் பர்மிங்காம் பகுதியிலேயே ஒரு வீடு விற்பனைக்கு இருப்பதாகக் கேள்விப்பட்டு, அதைப் பார்வையிட விரும்பியுள்ளார்கள்.
ஆனால், அந்த வீட்டைப் பார்வையிட அனுமதி மறுத்த அந்த வீட்டின் உரிமையாளரான Claire May (40) என்ற பிரித்தானிய பெண்மணி, அவர்கள் வீட்டைப் பார்வையிடுவதற்கு மறுப்பு தெரிவித்ததற்கு கொடுத்துள்ள காரணம்தான் சரீனா, சுமன் தம்பதியரைக் கொந்தளிக்கச் செய்துள்ளது.
இந்தியர்கள் மற்றும் ஆசியர்களை என் வீட்டைப் பார்க்க நான் அனுமதிப்பதில்லை, அவர்கள் சீரியஸாக வீடு வாங்குவதற்காக வருவதில்லை. அவர்கள் சும்மா நேரத்தைக் கடத்துவதற்காக வீடுகளைப் பார்வையிட வருவார்கள்.
இப்படி மற்றவர்களுடைய நேரத்தை நீங்கள் வீணாக்க விரும்பினால், அதற்கு நிறைய வீடுகள் இருக்கின்றன, அவற்றைச் சென்று பாருங்கள் என்று கூறியுள்ளார் May.
Mayஉடைய பதிலைக் கேட்டு அந்த பகுதியில் வாழும் பலரும் அதிர்ச்சியடைந்துள்ளார்கள். காரணம், அங்கு அதிகம் வாழ்வது இந்தியர்களும், கருப்பினத்தவர்களும்தான்.
எவ்வளவோ உலகம் முன்னேறியும், இந்த இனவெறுப்பு மட்டும் குறைந்ததாகத் தெரியவில்லை.
சரீனா, சுமன் தம்பதியருக்கு, Jhye (6) மற்றும் ஐந்து மாதக் குழந்தையான Saint என்னும் இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள். தங்களுக்கு ஏன் வீடு கிடைக்கவில்லை, இனவெறுப்பு என்றால் என்ன என்று கேட்ட தங்கள் மூத்த மகனுடன் வெகுநேரம் அமர்ந்து அவை குறித்து விளக்கவேண்டிய நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கும் சரீனா, தங்கள் சின்னப் பையனும் வளரும்போது இந்த இனவெறுப்பைச் சந்திக்க வேண்டிவரலாம் என அஞ்சுகிறார்.