கனடா எல்லையில் பனியில் உறைந்து உயிரிழந்த இந்தியர்கள்: வழக்கில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவு
கனடா அமெரிக்க எல்லையில் இந்தியக் குடும்பம் ஒன்று பனியில் உறைந்து பரிதாபமாக உயிரிழந்த வழக்கில், கனேடிய குடிமக்கள் இருவரை இந்தியாவுக்குக் கொண்டு வந்து விசாரிக்க இந்திய பொலிசார் திட்டமிட்டுள்ளனர்.
பனியில் உறைந்து பரிதாபமாக பலியான குடும்பம்
2022ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் 19ஆம் திகதி, குஜராத்திலுள்ள Dingucha என்ற கிராமத்தைச் சேர்ந்த, ஜகதீஷ் பட்டேல் (39), அவரது மனைவி வைஷாலி (37) மகள் விஹாங்கி (13) மற்றும் மகன் தார்மிக் (3) ஆகியோர் அடங்கிய குடும்பம், அமெரிக்காவுக்குள் நுழையும் முயற்சியின்போது, கனடா அமெரிக்க எல்லையில் பனியில் உறைந்து பரிதாபமாக பலியானது.
Vaishali Patel/Facebook
அவர்களை அமெரிக்காவுக்கு அனுப்புவதாக பணம் வாங்கிய சட்டவிரோத ஏஜண்டுகள், பட்டேல் குடும்பத்தினரை மனித்தோபா மாகாணத்திலுள்ள வின்னிபெக்கில் கொண்டு விட்டுவிட்டுச் சென்றுவிட, பட்டேல் குடும்பத்தினர் தாங்களாகவே நடந்தே எல்லையைக் கடக்க முயன்று, குளிரில் உறைந்து பரிதாபமாக பலியானார்கள்.
இந்தியாவில் கைது செய்யப்பட்ட மூன்று பேர்
இந்த வழக்கு தொடர்பாக இந்திய பொலிசார் Dashrath Chaudhary, Yogesh Patel மற்றும் Bhavesh Patel என்னும் மூன்று பேரை கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக, கனடாவில் வாழும் Fenil Patel மற்றும் Bitta Singh என்னும் இருவரை விசாரணைக்குட்படுத்த விரும்புவதாக இந்திய பொலிசார் தெரிவித்துள்ளனர்.
Vaishali Patel/Facebook
கனேடிய குடிமக்களான அவர்கள் இருவரையும் இந்தியாவுக்குக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை இந்திய அதிகாரிகள் துவக்கியுள்ளனர்.
அதே நேரத்தில், அவர்கள் இருவரையும் இந்தியாவுக்குக் கொண்டு வருவது குறித்த விடயம், வெளியிட இயலாத இரு நாடுகளுக்கிடையிலான இரகசிய விடயம் என்று கூறியுள்ள அதிகாரிகள், கனேடிய குடிமக்கள் இருவரை இந்தியாவுக்குக் கொண்டு வருவது தொடர்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் விடயத்தை தங்களால் உறுதி செய்யவோ மறுக்கவோ இயலாது என்று கூறியுள்ளனர்.