கூகுள் செய்த முறைகேடு: இந்திய போட்டி ஆணையம் மீண்டும் விசாரணை
ப்ளே ஸ்டோர் வழக்கில் வழிகாட்டுதல்களுக்கு இணங்காததற்காக கூகுளுக்கு எதிராக இந்திய போட்டி ஆணையம் விசாரணையைத் திறக்கிறது.
பிளே ஸ்டோர் கொள்கைகள் (Play Store policies) தொடர்பாக கடந்த ஆண்டு அக்டோபரில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை கூகுள் நிறுவனம் முறையாக பின்பற்றாதது தொடா்பான புகாா் குறித்த விசாரணையை இந்திய போட்டி ஆணையம் (CCI) வெள்ளிக்கிழமை தொடங்கியது.
இந்நிலையில், சிசிஐ-ன் கண்காணிப்பு குழு குறிப்பிட்ட கேள்விகளுடன் காரணம் கேட்டு அறிக்கை வெளியிட்டுள்ளது மற்றும் இதுதொடா்பாக நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு கூகுள்-இந்தியா நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கூகுள் நிறுவனம் இந்தியப் போட்டி ஆணையத்தின் உத்தரவுக்கு இணங்காதது ஒரு தீவிரமான பிரச்சினையாகக் கருதப்படுகிறது. இந்திய அறக்கட்டளையின் கூட்டமைப்பு (Alliance of Digital India Foundation) தாக்கல் செய்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கையை சிசிஐ மேற்கொண்டுள்ளது.
கூகுள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், நிறுவனம் அபராதத்தை எதிர்கொள்ள நேரிடும் மற்றும் அதன் மூத்த நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று சிசிஐ வட்டாரம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபா் 25-ஆம் திகதி, பிளே ஸ்டோரில் அதன் அதிகாரத்தை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் கூகுள் நிறுவனத்துக்கு சிசிஐ ரூ. 936.44 கோடி அபராதத்தை விதித்தது.
androidpolice
இதுபோன்ற முறைகேடுகளை கூகுள் உடனடியாக கைவிடவேண்டும் எனவும், குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் தொழில் போட்டி உடன்பாடுகளுக்கு எதிரான விவகாரங்களுக்கு தீா்வு காண வேண்டும் எனவும் கூகுள் நிறுவனத்துக்கு சிசிஐ உத்தரவிட்டது.
ஆனால், சிசிஐ-யின் உத்தரவை கூகுள் முறையாக பின்பற்றவில்லை என AIDF சாா்பில் அண்மையில் புகாா் அளிக்கப்பட்டது. அந்தப் புகாரின் அடிப்படையில், தொழில் போட்டிகள் சட்டப் பிரிவு 42-இன் கீழ் கூகுள் நிறுவனத்துக்கு எதிராக சிசிஐ விசாரணையைத் தொடங்கியுள்ளது.