சொந்த மண்ணில் இங்கிலாந்திடம் செம அடி வாங்கிய இந்தியா! காரணம் கூற விரும்பவில்லை: கோஹ்லி பேட்டி
இங்கிலாந்து அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா தோல்வியடைந்த நிலையில், தோல்விக்காக எந்த காரணத்தையும் கூற விரும்பவில்லை என்று கோஹ்லி கூறியுள்ளார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 578 ஓட்டங்களும், அதன் பின் முதல் இன்னிங்ஸில் இந்தியா 337 ஓட்டங்களும், இங்கிலாந்து இரண்டாவது இன்னிங்ஸில் 178 ஓட்டங்களுக்குள் ஆல் அவுட் ஆக, இந்திய அணிக்கு வெற்றி இலக்காக, 420 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டது.
ஆனால், நேற்றைய நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட்டை இழந்திருந்த இந்திய அணி, இன்று ஐந்தாம் நாள் ஆட்டம் துவங்கியவுடனே அடுத்தடுத்து இங்கிலாந்து அணியின் பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல், 192 ஓட்டங்களுக்குள் ஆல் அவுட் ஆக, 227 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.
இந்த தோல்வி குறித்து இந்திய அணியின் கேப்டன் கோஹ்லி கூறுகையில், முதல் இரண்டு நாள் ஆடுகளம் துடுப்பாட்ட வீரர்களுக்கு சாதகமாக இருந்தது. நாங்கள் போதிய அழுத்தத்தை இங்கிலாந்து அணிக்கு முதல் இன்னிங்ஸில் அளிக்கவில்லை.
இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணிக்குப் போதிய அழுத்தத்தைக் கொடுத்தோம். பந்து வீச்சாளர்கள் சிறப்பாகவே பந்து வீசினர். எனினும் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடியது.
ஆட்டத்தின் குறைகளையும், தோல்விகளையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். தோல்விக்காக எந்தக் காரணத்தையும் கூற விரும்பவில்லை. அடுத்து வரும் மூன்று போட்டிகளில் கடும் நெருக்கடியைக் கொடுப்போம் என்று கூறியுள்ளார்.