நடுவானில் PAN PAN PAN அழைப்பு விடுத்த விமானி - அவசரமாக தரையிறக்கம்
கோவா நோக்கி சென்ற இண்டிகோ விமானம், விமானியின் Pan அழைப்பிற்கு பின்னர் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
இண்டிகோ விமானம் தரையிறக்கம்
இண்டிகோ 6E-6271 விமானம் ஒன்று, 191 பயணிகள் உடன் நேற்று டெல்லியில் இருந்து கோவா நோக்கி புறப்பட்டது.
விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த நிலையில், தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், விமானம் அவசரமாக மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் இரவு 9:52 மணிக்கு தரையிறக்கப்பட்டது.
விமானம் பத்திரமாக தரையிறங்கியதும், விமானத்தில் இருந்து பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
அதன் பிறகு, மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டு பயணிகள் கோவாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
PAN அழைப்பு
விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, தொழில்நுட்ப கோளாறை உணர்ந்த விமானிகள், விமான கட்டுப்பட்டு அறைக்கு PAN PAN PAN அழைப்பு விடுத்துள்ளனர்.
பான் பான் அழைப்பு என்பது, விமானிகள் பயன்படுத்தும் சர்வதேச அளவிலான அங்கீகரிக்கப்பட்ட சமிக்ஞை ஆகும். உயிருக்கு ஆபத்து விளைவிக்காத அவசர நிலைகளை தெரிவிப்பதற்காக பயன்படுத்தப்படுகிறது.
விமானத்தில் உள்ள அமைப்புகளில் ஏதேனும் பழுது ஏற்படும் போது, மாற்று வழியில் விமானத்தை இயக்க வேண்டிய தேவை, அவசர தரையிறக்கம் போன்ற சூழல்களில் பான் பான் அழைப்பு பயன்படுத்தப்படும்.
இது மே டே(May Day) அழைப்புக்கு அடுத்த நிலையில் உள்ளதாகும். விமானம் தீப்பிடிக்கும்போது, மூழ்கும்போது போன்ற உயிருக்கு ஆபத்தான அவசரநிலை குறித்து எச்சரிக்கை மே டே அழைப்பு விடுக்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |