பெங்களூரு விமான நிலையத்தில் பரபரப்பு: தரையில் உரசிய விமானத்தின் வால் பகுதி
பெங்களூரு விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கிய போது அதன் வால் பகுதி தரையில் உரசியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பெங்களூரு விமான நிலையத்தில் பரபரப்பு
அசாமின் கெளஹாத்தி விமான நிலையத்தில் இருந்து பெங்களூருவின் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தை நோக்கி வந்த இண்டிகோ விமானம் நேற்று பலத்த காற்று காரணமாக தரையிறங்க முடியாமல் தவித்தது.
விமானம் முதல் முறை தரையிறங்க முயன்ற போது பலத்த காற்று காரணமாக மீண்டும் வானை நோக்கி பறந்து வானில் சில முறை வட்டமிட்டது.
இதையடுத்து இரண்டாவது முறையாக அந்த விமானம் தரையிறங்க முயன்ற போது அந்த விமானத்தின் வால் பகுதி ஓடுபாதையில் உரசியது.

இதனால் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது, இருப்பினும் அதிர்ஷ்டவசமாக விமானத்தின் பயணிகள் மற்றும் ஊழியர்கள் யாருக்கும் எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை. அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக இண்டிகோ விமான நிறுவனம் தன்னுடைய அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பலத்த காற்று காரணமாக இந்த சம்பவம் நடந்து இருப்பதாகவும். இத்தகைய நேரங்களில் பின்பற்றப்படும் வழக்கமான நடைமுறைகளின் படி, சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டதாக இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
விமானம் தற்போது பராமரிப்பு சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும், பின் முறையான அனுமதிக்கு பிறகு மீண்டும் இயக்கப்படும் என்றும் இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.