சிறுமிக்கு பாலியல் தொல்லை! கனடாவில் 22 வயது இந்திய வம்சாவளி இளைஞர் கைது
கனடாவில் இந்திய வம்சாவளி இளைஞர் ஒருவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிறுமிக்கு பாலியல் தொல்லை
கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தை சேர்ந்த யுவராஜ் சிங் என்ற 22 வயது இந்திய வம்சாவளி இளைஞர் கடந்த 2025ம் ஆண்டு ஆறு சிறுவர்களுடன் விடுதி ஒன்றில் பிடிபட்டார்.
ஏப்ரல் 24, 2025ம் ஆண்டு லெத்பிரிட்ஜ் காவல்துறை பிரிவிற்கு விடுதி அறையில் உள்ள பொருட்களை மீட்பது தொடர்பாக வந்த உதவி கோரிக்கையின் அடிப்படையில் சோதனை நடத்தினர்.

அப்போது யுவராஜ் சிங் என்ற இளைஞர் 12 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட 5 சிறுமிகள் மற்றும் 1 சிறுவன் உட்பட 6 சிறுவர்களுடன் இருப்பதை பொலிஸார் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
சமூக ஊடகங்கள் மூலம் இந்த சிறுவர்களுடன் தொடர்பு கொண்ட யுவராஜ் சிங், அவர்களை பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்றதோடு இறுதியில் விடுதி அறையில் வைத்து மது வழங்கியதாக கூறப்படுகிறது. மேலும் இதில் ஒரு சிறுமிக்கு யுவராஜ் சிங் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்ட விசாரணையின் போதே, கனடாவை விட்டு யுவராஜ் சிங் தப்பிச் சென்றார். இதையடுத்து அவருக்கு நாடு தழுவிய பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.
மீண்டும் கைது
இந்நிலையில் யுவராஜ் சிங் மீண்டும் கனடாவுக்கு திரும்பிய போது(ஜனவரி 19,2026) வான்கூவர் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து காவல்துறையினரால் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரிட்டிஷ் கொலம்பியா காவலில் தற்போது யுவராஜ் சிங் வைக்கப்பட்டுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |