பிரித்தானியாவின் மிகவும் கொடூரமான நபரை நாடுகடத்த ஆசிய நாடொன்று பேச்சுவார்த்தை
பிரித்தானிய வரலாற்றில் மிகவும் கொடூரமான வன்கொடுமை குற்றவாளியை திருப்பி அனுப்ப இந்தோனேசியா பேச்சுவார்த்தை நடத்தத் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
30 ஆண்டுகள் சிறைத்தண்டனை
கடந்த 2020 ஆம் ஆண்டு மான்செஸ்டரில் 48 ஆண்களைத் தாக்கியதற்காக தற்போது 41 வயதாகும் Reynhard Sinaga குற்றவாளி என உறுதி செய்யப்பட்டார்.
மான்செஸ்டரில் உள்ள பார்கள் மற்றும் விடுதிகளில் இருந்து குறித்த நபர்களை தனது அடுக்குமாடி குடியிருப்புக்கு அழைத்துச் சென்று போதைப்பொருள் கொடுத்து சீரழித்துள்ளதாக விசாரணையில் அம்பலமானது.
ஜனவரி 2015 முதல் மே 2017 வரை மொத்தம் 159 குற்றங்களுக்காக சினாகா குறைந்தது 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று மான்செஸ்டர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்த நிலையில், இந்தோனேசியாவின் சட்டம் மற்றும் மனித உரிமைகள் விவகாரங்களுக்கான மூத்த அமைச்சர் யுஸ்ரில் இஹ்சா மகேந்திரா வியாழக்கிழமை இரவு செய்தியாளர்களிடம் கூறுகையில்,
சினாகா தொடர்பான விவகாரத்தில் பிரித்தானிய அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகள் ஆரம்ப கட்டத்தில் உள்ளன என்றார். மேலும், தாயகம் திருப்பி அனுப்புதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் முடிவாக கால தாமதம் ஏற்படலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் கைதி பரிமாற்றம் மூலமாகவோ அல்லது இந்தோனேசியாவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரித்தானியக் கைதியுடனான பரிமாற்றம் மூலமாகவோ சினாகா விவகாரத்தை சாத்தியப்படுத்த நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
அதிகபட்ச பாதுகாப்பு சிறையில்
மேலும், ஒரு குடிமகன் எவ்வளவு தவறாக நடந்துகொண்டிருந்தாலும், அந்த நாடு தனது குடிமகனைப் பாதுகாக்க வேண்டிய கடமையைக் கொண்டுள்ளது என்றும் யூஸ்ரில் விளக்கமளித்துள்ளார்.
இருப்பினும், பிரித்தானியாவில் அமுலில் இருக்கும் சட்டங்களின் அடிப்படையில், சினாகா 30 ஆண்டுகள் சிறையில் இருந்த பின்னரே கருணை மனு தாக்கல் செய்ய முடியும் என்று யுஸ்ரில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பிரித்தானிய அரசாங்கம் அவர் நாடு திரும்புவதற்கு ஒப்புக்கொண்டால், அவர் அதிகபட்ச பாதுகாப்பு சிறையில் அடைக்கப்படுவார் என்று யுஸ்ரில் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, சினாகாவின் குடும்பத்தினர் அவரை நாடு கடத்துவதற்காக அமைச்சகத்தின் பிரதிநிதியைச் சந்தித்துள்ளதாக தகவல் வெளியானது. 2007 ஆம் ஆண்டு முதல் பிரித்தானியாவில் வசித்து வந்த சினாகா,
குடிபோதையில் அல்லது எளிதான இலக்காகத் தெரிந்த இளைஞர்களை குறிவைத்து, மயக்க மருந்து கொடுத்து அவர்களை சீரழித்துள்ளார். சினாகா தொடர்பான விசாரணை என்பது பிரித்தானிய சட்டத்துறை வரலாற்றில் மிகப் பெரியது என்றே கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |