வேகப்புயலாக மாறிய ரேணுகா சிங்! 100 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியா மிரட்டல் வெற்றி
காமன்வெல்த் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி 100 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பார்படோஸ் வுமன் அணியை வீழ்த்தியது.
பெர்மிங்காமின் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் இந்தியா - பார்படோஸ் வுமன் அணிகளுக்கு இடையிலான டி20 போட்டி நடந்தது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பார்படோஸ் வுமன் பந்துவீச்சை தெரிவு செய்தது.
அதன்படி களமிறங்கிய இந்திய அணியில் ஸ்மிருதி மந்தனா 5 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த ஷஃபாலி வெர்மா - ஜெமிமா ரோட்ரிகாஸ் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 26 பந்துகளில் 43 ஓட்டங்கள் விளாசிய ஷஃபாலி வெர்மா துரதிர்ஷ்டவசமாக ரன்அவுட் ஆனார்.
அதன் பின்னர் களமிறங்கிய கேப்டன் ஹர்மன்ப்ரீத், தானியா பாட்டியா சொற்ப ஓட்டங்களில் வெளியேறினர். அவர்களைத் தொடர்ந்து வந்த தீப்தி ஷர்மா, ஜெமிமா இருவரும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் ஓட்டங்களை சேர்த்தனர்.
அவர்களது ஆட்டத்தின் மூலம் இந்திய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 162 ஓட்டங்கள் எடுத்தது. ஜெமிமா 56 ஓட்டங்களும், தீப்தி 34 ஓட்டங்களும் எடுத்தனர். அடுத்து களமிறங்கிய பார்படோஸ் வுமன் அணி, ரேணுகா சிங்கின் புயல் வேகப்பந்து வீச்சில் சரிந்தது.
PC: Twitter (@BCCIWomen)
அதிரடி வீராங்கனைகளான டோட்டின், ஹயலே மேத்யூஸ் மற்றும் கியசியா நைட் ஆகியோர் ஒற்றை இலக்கங்களில் ரேணுகா சிங் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்த பார்படோஸ் வுமன் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 62 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.
இதன்மூலம் இந்திய அணி 100 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பார்படோஸ் வுமன் அணியில் அதிகபட்சமாக கயஷோனா நைட் 16 ஓட்டங்கள் எடுத்தார்.
இந்திய அணி தரப்பில் ரேணுகா சிங் 10 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மேக்னா சிங், ஸ்னேஹ் ராணா, ராதா யாதவ் மற்றும் ஹர்மன்ப்ரீத் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
PC: Twitter (@BCCIWomen)