மிரட்டிய இலங்கை கேப்டன்! இந்திய அணியிடம் போராடி தோல்வி
பல்லேகேலேவில் நடந்த கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணி 39 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது.
இலங்கை - இந்தியா மகளிர் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி பல்லேகேலேவில் நடந்தது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணியின் கேப்டன் சமரி அதப்பத்து பந்துவீச்சை தெரிவு செய்தார். அதன்படி களமிறங்கிய இந்திய அணியில் மந்தனா 6 ஓட்டங்களில் வெளியேறினார். பின்னர் களமிறங்கிய யஸ்டிகா பாட்யா, ஷபாலி வெர்மாவுடன் இணைந்து அதிரடி காட்டினார்.
அணியின் ஸ்கோர் 89 ஆக உயர்ந்தபோது யஸ்டிகா 30 ஓட்டங்களில் இனொக ரணவீரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ஹர்லீன் தியோல், தீப்தி சர்மா ஆகியோர் சொற்ப ஓட்டங்களில் வெளியேறினர்.
PC: Twitter(@ICC)
ஷபாலி வெர்மா அதிரடியாக 49 ஓட்டங்கள் விளாசி ஆட்டமிழந்தார். அதனைத் தொடர்ந்து கைகோர்த்த கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் மற்றும் பூஜா வஸ்திரேக்கர் இருவரும் அதிரடியாக அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இவர்களது கூட்டணி 97 ஓட்டங்கள் குவித்தது. 75 ஓட்டங்கள் எடுத்திருந்த ஹர்மன்பிரீத்தை இலங்கை கேப்டன் அதப்பத்து வெளியேற்றினார்.
பின்னர் வந்த வீரர்களும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க இந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 255 ஓட்டங்கள் குவித்தது. கடைசி வரை களத்தில் இருந்த பூஜா 56 ஓட்டங்கள் எடுத்தார். இலங்கை அணி தரப்பில் அதப்பத்து, இனொக மற்றும் ராஷ்மி டி சில்வா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
PC: Twitter(@ICC)
அதன் பின்னர் களமிறங்கிய இலங்கை அணியில் விஷ்மி 3 ஓட்டங்ககளில் வெளியேறினார். கேப்டன் அதப்பத்து, ஹாசினி இருவரும் பொறுப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தினர். இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத் பந்துவீச்சில் இலங்கை கேப்டன் அதப்பத்து ஆட்டமிழந்தார். அவர் 41 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 44 ஓட்டங்கள் எடுத்தார்.
அவரைத் தொடர்ந்து களமிறங்கிய கவிஷா 12 ஓட்டங்களிலும், ஹர்ஷிதா 22 ஓட்டங்களிலும் வெளியேறினர். நிலக்ஷி டி சில்வா நிலையான ஆட்டத்தினை வெளிப்படுத்த, ஏனைய வீராங்கனைகள் சொற்ப ஓட்டங்களில் வெளியேறினர். கடைசி கட்டத்தில் ராஷ்மி 18 ஓட்டங்கள் விளாசினார்.
PC: Twitter(@ICC)
தீப்தி சர்மா பந்துவீச்சில் கடைசி விக்கெட்டாக இனொக ரணவீரா ஆட்டமிழக்க இலங்கை அணி 47.3 ஓவர்களில் 216 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. இறுதிவரை களத்தில் நின்ற நிலக்ஷி டி சில்வா 59 பந்துகளில் ஒரு சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 48 ஓட்டங்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் ராஜேஸ்வரி கெய்க்வாட் 3 விக்கெட்டுகளையும், பூஜா மற்றும் மேக்னா சிங் தலா இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
PC: Twitter(@ICC)