இளவரசர் பிலிப் இறுதிச்சடங்கில் பங்கேற்கும் ஹரி- மேகன் குறித்து வெளியான தகவல்
தனது தாத்தாவின் இறுதிச்சடங்கில் பங்கேற்க இளவரசர் ஹரி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியான நிலையில், கர்ப்பிணியான மேகன் மெர்க்கல் பிரித்தானியா திரும்புவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
பிரித்தானிய ராணியாரின் கணவரும் இளவரசருமான பிலிப் தமது 99வது வயதில் இன்று காலமானார்.
கொரோனா காலகட்டம் என்பதால் அரசு மரியாதை ஏதும் நடைபெறாது எனவும், குடும்ப உறுப்பினர்கள் உள்பட மிகவும் குறைந்த எண்ணிக்கையிலானோருடன் இறுதிச்சடங்குகள் முன்னெடுக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இளவரசர் பிலிப்பின் இறுதிச்சடங்கில் யார் யார் பங்கேற்பார்கள் என்ற பட்டியல் உத்தியோகப்பூர்வமாக வெளியாகவில்லை என்றாலும், அதில் இளவரசர் ஹரி மற்றும் அவரது மனைவி மேகன் மெர்க்கலின் பெயர் இடம்பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது.
ஆனால், இளவரசர் பிலிப்பின் மறைவு தொடர்பில் தகவல் அறிந்ததும் ஹரி புறப்படத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சூழலில் இளவரசர் ஹரியுடன் இருக்கவே விரும்புவதாக மேகன் குறிப்பிட்டுள்ளதாகவும், ஆனால் அவரது பயணம் உறுதி செய்யப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.
2020 மார்ச் மாதம் நாட்டை விட்டு வெளியேறிய பின்னர் இளவரசர் ஹரி முதன் முறையாக பிரித்தானியா திரும்ப உள்ளார்.
இளவரசர் பிலிப்பின் உடல் தற்போது விண்ட்சர் கோட்டையில் வைக்கப்பட்டுள்ளது. 2018ல் இளவரசர் ஹரி- மேகன் தம்பதி திருமணம் செய்து கொண்ட செயின்ட் ஜார்ஜ் சேப்பலில் இறுதிச் சடங்கு முன்னெடுக்கப்படும் என்றே தெரிய வந்துள்ளது.
மேலும், இளவரசரின் இறுதிச் சடங்கில் பொதுமக்கள் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் இருப்பதால், இளவரசர் பிலிப்பின் இறுதிச் சடங்குகளும் மிகவும் தனிப்பட்ட முறையிலேயே நடத்த முடிவு செய்துள்ளனர்.
இதனிடையே, கர்ப்பிணியான மேகன் மெர்க்கல் 12 மணி நேர விமான பயணம் மேற்கொண்டு பிரித்தானியா திரும்புவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
மருத்துவர்களின் ஆலோசனை பெறப்படும் எனவும், ஆனால் உறுதியாக ஹரி புறப்படுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
மட்டுமின்றி, இளவரசர் பிலிப்பின் நிலை அறிந்ததும், உடனடியாக புறப்படும் பொருட்டு, இளவரசர் ஹரி சுயதனிமைப்படுத்தலுக்கு தம்மை உட்படுத்திக் கொண்டார் எனவும், இதனால் பயணச் சிக்கல் ஏதும் இருக்காது என்றே கூறப்படுகிறது.

