பிரித்தானியர்கள் பிரெஞ்சு விசா பெறும் நடைமுறை கடுமையாக்கப்பட்டதாக தகவல்: உண்மை நிலவரம் என்ன?
ஓய்வு பெற்ற பிரித்தானியர்கள் பிரெஞ்சு விசா பெறும் நடைமுறை கடுமையாக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன.
அந்த செய்திகள் உண்மையானவையா?
ஓய்வு பெற்ற பிரித்தானியர்கள் பிரெஞ்சு விசா பெறும்போது தங்களுடைய வருவாயை நிரூபிக்கும் நடைமுறை கடுமையாக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களிலும், அதிகாரப்பூர்வமற்ற இணையதளங்களிலும் செய்திகள் வெளியாகி வருகின்றன.
ஓய்வு பெற்ற பிரித்தானியர்கள் பிரெஞ்சு விசா பெறும்போது தங்களிடம் குறைந்தபட்சம் 2,000 யூரோக்கள் உள்ளதை நிரூபிக்கவேண்டும் என்பது போன்ற சில கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக அந்த இணையதளங்கள் கூறுகின்றன.
ஆனால், அந்த செய்தியில் உண்மையில்லை என பிரான்ஸ் தூதரக அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், பிரான்ஸ் விசாவுக்கு விண்ணப்பிக்கும்போது அதிகாரப்பூர்வ இணையதளங்களை மட்டுமே பின்பற்றுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
அதிகாரப்பூர்வ இணையதளங்கள், விசா தொடர்பில் எவ்வளவு தொகை வைத்திருக்கவேண்டும் என குறிப்பிட்டுச் சொல்வதே இல்லை என்பதே உண்மை.
பிரித்தானியர்கள் பிரான்சுக்கு வரும்போது, அவர்கள் பிரான்சில் தங்கும் காலகட்டத்துக்கு போதுமான நிதி அவர்களிடம் இருக்கவேண்டும் என்றே இணையதளம் கூறுகிறது.
உத்தேசமாக பிரான்சுக்கு வரும் ஒருவர் எவ்வளவு பணம் வைத்திருக்கவேண்டும்?
குறைந்தபட்சம் ஒருவர் பிரான்சின் குறைந்தபட்ச ஊதியத்துக்கு இணையான தொகை ஒன்றை, உதாரணமாக, 1,329 யூரோக்கள் வைத்திருக்கவேண்டும். தம்பதியர் என்றால், மாதம் ஒன்றுக்கு சில நூறு யூரோக்கள் அதிகம் வைத்திருக்கவேண்டுமேயொழிய, இரண்டு மடங்கெல்லாம் வைத்திருக்கத் தேவையில்லை.