பிரித்தானிய சிறுமி கொடுத்த தகவல்... குழந்தைகளுக்கு போதை மருந்து பரிசோதனை செய்த பொலிசார்: வெளியான அதிரவைக்கும் தகவல்
பிரித்தானிய சிறுமி ஒருத்தி, தவழும் குழந்தைகளான தன் தங்கைகளை தூங்க வைப்பதற்காக, தன் தந்தை அவர்களுக்கு போதை ஊசி போட்டதாக பொலிசாருக்கு கொடுத்த தகவலின்பேரில் குழந்தைகளுக்கு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படன.
இங்கிலாந்திலுள்ள Lancashireஇல் வாழும் ஒரு கணவனும் மனைவியும் போதைக்கு அடிமையானவர்கள். சமூக சேவை அமைப்புகள் போதை அடிமைத்தனத்திலிருந்து விடுபட அவர்களுக்கு உதவிவந்துள்ளன.
ஆனால், பெற்றோர் மீது மட்டும் கவனம் செலுத்திய அந்த சமூக சேவை அமைப்புகள், வீட்டில் இருக்கும் பிள்ளைகளை கவனிக்கத் தவறியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
விடயம் என்னவென்றால், அந்த பெற்றோருக்குப் பிறந்த பிள்ளைகளில் ஒரு சிறுமி, அவள் தற்போது அந்த வீட்டில் இல்லை, அவள் பொலிசாருக்கு ஒரு அதிரவைக்கும் தகவலை அளித்துள்ளாள்.
அதாவது, கைக்குழந்தைகளான தன் தங்கைகளைத் தூங்கவைப்பதற்காக, தன் தந்தை அவர்களுக்கு ஊசி வழியாக போதை மருந்தை செலுத்தி வருவதாக அவள் தெரிவித்திருக்கிறாள்.
தகவலறிந்த பொலிசார் குழந்தைகளின் உடலில் போதைப்பொருள் உள்ளதா என்பதைக் கண்டறிவதற்காக அவர்கள் உடலில் இருந்து இரத்த மாதிரிகளை சேகரித்து ஆய்வகத்துக்கு அனுப்பியுள்ளார்கள்.
அந்த பரிசோதனைகளில் அந்த குழந்தைகள் உடலில் ஹெராயின் என்னும் போதைப்பொருள் இருப்பது தெரியவந்ததுடன், ஒரு குழந்தையின் தொடையில் போதை ஊசி போட்டதற்கான அடையாளமும் தெரியவரவே, உடனடியாக அந்த குழந்தைகளை மீட்டு அரசு காப்பகத்துக்கு அனுப்பி வைத்துள்ளார்கள் பொலிசார்.
மொத்தம் அந்த வீட்டில் நான்கு குழந்தைகள் இருந்த நிலையில், நான்கு குழந்தைகளுமே இப்போது காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்கள்.
குழந்தைகளில் ஒருத்தி, நான் காப்பகத்திலேயே வாழ்வேனே தவிர, இனி தப்பித் தவறி கூட என் பெற்றோர் வாழும் அந்த வீட்டுக்கு திரும்பிப் போகமாட்டேன் என்று கூறியுள்ளதிலிருந்து, அந்த குழந்தைகள் சின்னஞ்சிறு வயதிலேயே அந்த குடும்பத்தில் எவ்வளவு மனக்கஷ்டங்களை அனுபவித்துள்ளார்கள் என்பது தெரியவந்துள்ளது.