உலகில் அதிக பில்லியனர்களை உருவாக்கிய 12 நிறுவனங்கள் பட்டியலில் Infosysy
Infosys Among Top Billionaire-Making Companies: உலகில் அதிக பில்லியனர்களை உருவாக்கிய 12 நிறுவனங்கள் பட்டியலில் Infosysy இடம்பிடித்துள்ளது.
Infosysy - ஒரே இந்திய நிறுவனம்
இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்ஃபோசிஸ் (Infosys), உலக அளவில் அதிக பில்லியனர்களை உருவாக்கிய நிறுவனங்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ளது.
வர்த்தக ஆய்வு நிறுவனமான Atmos வெளியிட்டுள்ள புதிய ஆய்வின்படி, ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட பில்லியனர்களைக் கொண்ட உலகின் 12 நிறுவனங்களில் இடம்பெற்றுள்ள ஒரே இந்திய நிறுவனம் இன்ஃபோசிஸ் ஆகும். இந்த ஆய்வின்படி, இன்ஃபோசிஸ் நிறுவனத்தை உருவாக்கிய 5 நிறுவனர்களும் தற்போது பில்லியனர்களாக உள்ளனர்.

இவர்களின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு சுமார் 13.3 பில்லியன் அமெரிக்க டொலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.1.19 லட்சம் கோடி) என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள மற்ற சில நிறுவனங்களைப் போல அல்லாமல், இன்ஃபோசிஸில் பில்லியனர்களாக இருப்பவர்கள் அனைவரும் நிறுவனத்தின் நிறுவனர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Anthropic முதலிடம்
உலக அளவில் இந்தப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப நிறுவனமான Anthropic. இந்த நிறுவனத்தின் ஏழு இணை நிறுவனர்கள் கோடீஸ்வரர்களாக உள்ளனர். இவர்களின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு 95.4 பில்லியன் டொலர்கள். இவர்கள் அனைவரும் கடந்த 2021-ஆம் ஆண்டு OpenAI நிறுவனத்திலிருந்து வெளியேறி Anthropic நிறுவனத்தைத் தொடங்கியவர்கள்.
Google - Alphabet
Google நிறுவனத்தின் தாய் நிறுவனமான Alphabet, 5 கோடீஸ்வரர்களுடன் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இவர்களின் மொத்த சொத்து மதிப்பு 553 பில்லியன் டொலர்கள். இதில் Google இணை நிறுவனர்களான Larry Page மற்றும் Sergey Brin ஆகியோரின் சொத்துகளே பெரும்பகுதியைக் கொண்டுள்ளன. தற்போதைய Alphabet தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சையும் (Sundar Pichai) இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.

Meta
Meta நிறுவனத்தில் ஆறு கோடீஸ்வரர்கள் உள்ளனர். இவர்களின் மொத்த சொத்து மதிப்பு 262.9 பில்லியன் டொலர்கள். இதில் Mark Zuckerberg உள்ளிட்ட நிறுவனர்கள் மட்டுமின்றி, முன்னாள் ஊழியர்களும் இடம்பெற்றுள்ளனர்.
சீனாவின் Xiaomi நிறுவனத்தில் 5 கோடீஸ்வரர்கள் உள்ளனர். இவர்களின் மொத்த சொத்து மதிப்பு 36 பில்லியன் டொலர்கள். மேலும், சுவிட்சர்லாந்தின் Glencore நிறுவனத்தில் 6 கோடீஸ்வரர்களும், ரஷ்யாவின் Alfa Group நிறுவனத்தில் 6 கோடீஸ்வரர்களும் உள்ளனர்.
இந்நிறுவனங்கள் தொடர்பான ஆய்வில் சுமார் 100 நிறுவனங்கள் பரிசீலிக்கப்பட்டுள்ளன. நிறுவனத்தைத் தொடங்கியவர்கள் அல்லது அங்கு பணியாற்றி தங்களது செல்வத்தை உருவாக்கியவர்கள் மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.
முதலீட்டாளர்கள், வாரிய உறுப்பினர்கள் மற்றும் வாரிசுகள் இதில் சேர்க்கப்படவில்லை. நிறுவனங்களில் கிடைக்கும் சம்பளத்தைவிட பங்குகள் மற்றும் பங்கு உரிமைகள் மூலமாகவே பலர் பெரும் செல்வந்தர்களாக மாறுகின்றனர் என்பதையும் இந்த ஆய்வு எடுத்துக்காட்டுகிறது. உலகின் முன்னணி நிறுவனங்களின் வளர்ச்சியில் நிறுவனர்கள் மட்டுமின்றி ஆரம்பகால ஊழியர்களின் பங்குகளும் பெரும் செல்வத்தை உருவாக்குகின்றன என்பதற்கு இந்தப் பட்டியல் ஒரு சான்றாக அமைந்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |