உணவுப்பிரியர்களுக்கு சோதனை மேல் சோதனை... லண்டன் பல்பொருள் அங்காடிகளில் உணவில் ஊசி மூலம் மர்மப்பொருளை செலுத்திய நபர் கைது
என்னவோ தெரியவில்லை, பிரித்தானிய உணவுப்பிரியர்களுக்கு தொடர்ந்து சோதனை மேல் சோதனை வந்துகொண்டிருக்கிறது.
நேற்றுதான் தங்களுக்கு விருப்பமான ஸ்நாக்ஸ் ஒன்றை சாப்பிட்ட பிரித்தானியர்கள் பலர் வாந்தியும் வயிற்றுப்போக்கும் வந்து அவதியுற்றார்கள். இனி அந்த ஸ்நாக்ஸை தொடவே மாட்டோம் என்று கூறியிருக்கிறார்கள் சிலர்.
இன்னொரு பக்கம் பல பல்பொருள் அங்காடிகளில் பல உணவுப்பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில், இன்று இன்னொரு செய்தி வந்திருக்கிறது. இருந்த உணவிலும், ஒருவர் ஏதோ ஒரு மர்மப்பொருளை ஊசி மூலம் செலுத்தியதாக கைது செய்யப்பட்டிருக்கிறார் என்பதுதான் அந்த செய்தி.
நேற்று இரவு சுமார் 8 மணியளவில், மேற்கு லண்டனில் ஒருவர் மக்களை மோசமான வார்த்தைகளால் திட்டிக்கொண்டிருந்ததாக பொலிசாருக்கு தகவலளிக்கப்பட்டது.
விரைந்து வந்த பொலிசாருக்கு எதிர்பாராத செய்தி ஒன்று காத்திருந்தது. ஆம், அந்த நபர் லண்டனிலுள்ள Tesco, Waitrose மற்றும் Sainsbury பல்பொருள் அங்காடிகள் பலவற்றில் நுழைந்து, ஊசிகள் மூலம் உணவுப்பொருட்களில் மர்மப்பொருள் ஒன்றை செலுத்தியது தெரியவந்துள்ளது.
உடனடியாக பொலிசார் அவரைக் கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் சென்றார்கள்.
இந்த தகவல் அறிந்ததும் சம்பந்தப்பட்ட பல்பொருள் அங்காடிகள் உடனடியாக மூடப்பட்டுள்ளன.
அதிகாரிகளும் வாடிக்கையாளர்களுக்கு அவசர எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்கள்.
அதன்படி, அந்த பல்பொருள் அங்காடிகளில் நேற்று மாலை எதையாவது வாங்கியிருந்தால், அவற்றை குப்பையில் வீசி விடுமாறு அவர்கள் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.
என்னென்ன உணவுகள் பாதிப்புக்குள்ளாகியுள்ளன என்பது சரியாக தெரியாவிட்டாலும், பதப்படுத்தப்பட்ட இறைச்சி மற்றும் மைக்ரோவேவ் அவனில் வைத்து தயார் செய்யப்படும் உணவுகள் ஆகியவை பாதிக்கப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.
பாதிக்கப்பட்ட பல்பொருள் அங்காடிகளில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.