பட்டப்பகலில் 9 வயது சிறுமிக்கு ஏற்பட்ட துயரம்: பிரித்தானியாவை உலுக்கிய சம்பவத்தின் பின்னணி
பிரித்தானியாவின் லிங்கன்ஷையரில் பட்டப்பகலில் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட ஒன்பது வயது சிறுமியின் பெயர் மற்றும் புகைப்படங்கள் முதன்முறையாக வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த கொலை வழக்கில் தொடர்புடையதாக கருதப்படும் இருவரை பொலிசார் விசாரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. லிதுவேனியாவை சேர்ந்த 9 வயது சிறுமி Lilia Valutyte என்பவரே நேற்று மாலை சுமார் 6.20 மணியளவில் பாஸ்டனில் சடலமாக மீட்கப்பட்டார்.
உள்ளூர் மக்களை மொத்தமாக உலுக்கிய இந்த கொடூர சம்பவம் தொடர்பில் அப்பகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் தமது அதிர்ச்சியை வெளிப்படுத்தியதுடன், குற்றவாளிகளை கைது செய்ய விரைவான நடவடிக்கைக்கும் கோரிக்கை விடுத்தார்.
இந்த நிலையில், சிறுமி கொலை வழக்கில் தொடர்புடைய இருவரை பொலிசார் கைது செய்துள்ளதாகவும், விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பகுதிகளில் கத்திக்குத்து சம்பந்தப்பட்ட குற்றங்கள் முந்தைய ஆண்டை விட 10 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் சுட்டிக்காட்டியுள்ளன.
லண்டனில் 24 மணி நேரத்தில் வெவ்வேறு பகுதிகளில் மூவர் கத்தியால் தாக்கி கொல்லப்பட்டுள்ளனர். இன்னொருவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார்.
மட்டுமின்றி, பிரித்தானியாவில் குழந்தைகள் கொடூரமான கத்திக்குத்துக்கு ஆளாவது இது முதல் முறை அல்ல. கடந்த நவம்பரில் லிவர்பூலில் 12 வயதான அவா வைட் ஒரு இளைஞனால் கொலை செய்யப்பட்டதில், கொலைகாரனுக்கு குறைந்தபட்சம் 13 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.