பிரான்சில் பொது இடங்களில் மக்களுக்கு கொரோனா உள்ளதா என்பதை கண்டறிய புதுவித சோதனை துவக்கம்
பிரான்சில், பொது இடங்களில் மக்களுக்கு கொரோனா உள்ளதா என்பதைக் கண்டறிய, மோப்ப நாய்களை பயன்படுத்தும் முயற்சி நேற்று முதல் துவங்கியுள்ளது.
இந்த சோதனை முயற்சியில், உயர்நிலைப் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் உட்பட 2,000 இளைஞர்கள் பங்கேற்கின்றனர். விமான நிலையங்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள் போன்ற கூட்டம் அதிகமுள்ள இடங்களில் கொரோனாவைக் கண்டறிவதற்காக மோப்ப நாய்கள் உதவலாம் என்ற நம்பிக்கையில், இந்த முயற்சி துவக்கப்பட்டுள்ளது.
இந்த சோதனையில் பங்கேற்போர், தங்கள் கழுத்துப்பகுதி அல்லது அக்குளிலிருந்து வியர்வையை ஒரு துணியால் துடைத்து குறிப்பிட்ட இடத்தில் போட்டுவிடுவார்கள்.
பயிற்சி பெற்ற மோப்ப நாய்கள் அவற்றில் எதிலாவது கொரோனா உள்ளதா என்பதை மோப்பம் மூலம் கண்டறிந்து தங்கல் பயிற்சியாளருக்கு தெரியப்படுத்தும்.
இதற்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட சோதனை முயற்சிகள் நல்ல விளைவுகளைக் கொடுத்துள்ள நிலையில், இப்போது அடுத்த கட்ட சோதனை துவக்கப்பட்டுள்ளது.
இதுபோக, மனிதர்களின் வியர்வை அல்லாமல், அவர்களது மாஸ்கை மோப்பம் பிடித்தே மோப்ப நாய்கள் கொரோனாவை கண்டறியும் சோதனைகளை மேற்கொள்ளவும் ஆய்வாளர்கள் திட்டம் வைத்துள்ளார்கள்.