கழிவறையில் விழுந்து கிடந்த இந்திய பெண்... இலங்கை தம்பதியர் குறித்து வெளியான அதிரவைக்கும் தகவல்கள்
அவுஸ்திரேலியாவில் கழிவறையில் விழுந்து கிடந்த இந்திய பெண் ஒருவரை மருத்துவ உதவிக்குழுவினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்க, அவர் கூறிய தகவல்களைக் கேட்ட அனைவரும் கடும் அதிர்ச்சியடைந்தனர்.
அவுஸ்திரேலியாவிலுள்ள Glen Waverley என்ற இடத்தில் அமைந்துள்ள ஒரு வீட்டில், தமிழ்நாட்டைச் சேர்ந்த அந்த 67 வயது பெண், கழிவறையில் சிறுநீரில் தொப்பமாக நனைந்து கிடந்துள்ளார்.
அவர் மருத்துவமனைக்கு கொண்டுவந்தபோது, கந்தசாமி கண்ணன் (57)மற்றும் குமுதினி கண்ணன் (53)என்ற இலங்கை தம்பதியர் வீட்டில் 2007 முதல் 2015 வரை எட்டு ஆண்டுகளாக அடிமையாக வைக்கப்பட்டிருந்தவர் என்ற அதிரவைக்கும் உண்மை தெரியவந்தது.
வெறும் 40 கிலோ எடையே இருந்த அந்த பெண், நாளொன்றிற்கு வெறும் 3.39 டொலர்கள் மட்டுமே ஊதியம் வழங்கப்பட்டது முதல், தான் அடித்து உதைக்கப்பட்டது வரையிலான பல தகவல்களை வெளியிட, மருத்துவமனை ஊழியர்கள் மட்டுமல்ல, வழக்கு நீதிமன்றம் வந்தபோது நீதிபதிகளும் கலங்கிப்போனார்கள்.
தன்னை அடித்து உதைத்ததுடன், தன் கால்களில் கண்ணனின் மனைவி குமுதினி சுடுதண்ணீரை ஊற்றி கொடுமைப்படுத்தியதாகவும், முகத்தில் சூடான தேநீரை ஊற்றியதாகவும் தெரிவித்துள்ள அந்த பெண், காலை 5.30 முதல், மறுநாள் காலை 3 மணி வரை தொடர்ந்து தான் வேலை செய்யக் கட்டாயப்படுத்தப்பட்டதாகவும், அதிகபட்சம் ஒரு மணி நேரம் மட்டுமே தூங்க அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
ஆனால், தாங்கள் அந்த பெண்ணை ராஜ மரியாதையுடன் நடத்தியதாகவும், அவர் பொய் சொல்வதாகவும் குமுதினி கூறினார்.
ஆனால், அவர் சொன்னது பொய் என்பதற்கு அந்த பெண்ணின் உடலிலிருந்த புண்களும், காயங்களுமே ஆதாரமாகின. இந்த வழக்கு கடந்த வாரம் இறுதி கட்டத்தை எட்டிய நிலையில், நீண்ட விவாதத்திற்குப் பின், மிக நீண்ட தீர்ப்பை வழங்கினார் நீதிபதி Champion.
அந்த இந்திய பெண் மனிதாபிமானமற்ற நிலையில் நடத்தப்பட்டது முதல், குமுதினி கூறிய பொய்கள் வரை விலாவாரியாக விவரித்த நீதிபதி, குமுதினிதான் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளி என்றும், அவருக்கு எட்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பதாகவும் தெரிவித்தார்.
குமுதினியால் நான்கு ஆண்டுகளுக்கு பரோலில் வர முடியாது. அந்த பெண்ணுக்கு நடந்த கொடுமைகளை கண்டும் காணாமல் விட்ட குமுதினியின் கணவர் கந்தசாமி கண்ணனுக்கு ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு அவரால் பரோலில் வர முடியாது.