பெண்கள் மனநிலையில் பாதிப்பை ஏற்படுத்தும் இன்ஸ்டாகிராம்
இளம்பெண்களின் மனநிலையில் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்கள் பாதிப்பை ஏற்படுத்துவதாக பேஸ்புக் முன்னெடுத்த ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.
தற்போதைய இளம் தலைமுறையினரிடம் அதிக அளவில் பயன்பாட்டில் இருக்கும் சமூக ஊடகங்களில் ஒன்று இன்ஸ்டாகிராம். இதைப் பயன்படுத்துபவர்களில் 40%க்கும் மேலானோர் 20 வயதுக்குக் குறைவானவர்கள்.
இந்த நிலையில் சமீபத்தில், பேஸ்புக் நிறுவனம் இன்ஸ்டாகிராம் சார்ந்து ஆய்வு ஒன்றை முன்னெடுத்துள்ளது. குறித்த ஆய்வின் முடிவுகள் தற்போது இன்ஸ்டாகிராம் பயன்பாடு குறித்த கேள்வியை அதிகரித்துள்ளது.
இன்ஸ்டாகிராம் பக்கத்தை அதிகம் பயன்படுத்தும் இளம்பெண்கள் தங்களின் உடல், அழகு, தோற்றம் குறித்து அதிகம் கவலைப்படுவதாக அந்த ஆய்வின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இளம்பெண்கள் ஏற்கெனவே தங்கள் உடல், அழகு, தோற்றம் குறித்த வருத்தத்தில் இருக்கும்போது, இன்ஸ்டாகிராம் பயன்பாடும் மேலும் அக்கவலையை அதிகரித்துள்ளதாக 32% பெண்கள் பேஸ்புக் நடத்திய ஆய்வில் கருத்து தெரிவித்துள்ளனர்.
தங்கள் உருவத் தோற்றம் குறித்த அச்சத்தையும் இன்ஸ்டாகிராம் ஏற்படுத்தியுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். 20 வயதான பெண் ஒருவர் இது தொடர்பில் தெரிவிக்கையில், இன்ஸ்டாகிராம் பயன்படுத்துவதால் எனது உடல் அழகானதாக இல்லை என்று உணர்ந்தேன்.
நான் ஜிம்மிற்கு நிறைய சென்றிருந்தாலும், என் உடல் இன்ஸ்டாகிராமில் தாக்கத்தைச் செலுத்துபவர்களின் உடல்போல் இல்லை என்று வருத்தம் தமக்கு இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.