வெளிநாடொன்றில் பிரித்தானிய இளைஞர்களை அவமதிக்கும் செயல்... வெளியாகியுள்ள வீடியோ
நெதர்லாந்தின் தலைநகரான ஆம்ஸ்டர்டாம், பிரித்தானிய இளைஞர்களை அவமதிக்கும் வகையில் விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளது.
இங்கே வராதீர்கள்
அந்த வீடியோவில். இளைஞர் ஒருவர் சாலையில் அலைந்து திரியும்போது கைது செய்யப்படுவதை காணலாம். அத்துடன், இரவுப்பொழுதை ஜாலியாக கழிப்பதற்காக ஆம்ஸ்டர்டாமுக்கு வருகிறீர்களா, பிரச்சினைகளை சந்திக்க நேரும், அபராதமும் விதிக்கப்படும், ஆகவே, வராதீர்கள் என்ற தொனியில் உருவாக்கப்பட்டுள்ளது அந்த விளம்பர வீடியோ.
சுற்றுலாத்தலங்கள் பல இருந்தாலும், கஞ்சா புகைக்கும் இடங்களும், சிவப்பு விளக்கு பகுதிகளும் ஆம்ஸ்டர்டாமில் பிரபலம். அவற்றை சுற்றுலா இணையதளங்கள் விளம்பரப்படுத்துவதை இப்போதும் காணலாம்.
ஆண்டொன்றிற்கு சுமார் 20 மில்லியன் சுற்றுலாப்பயணிகள், ஒரு மில்லியன் பிரித்தானியர்கள் உட்பட ஆம்ஸ்டர்டாமுக்கு வருகை புரிகிறார்கள்.
பிரித்தானிய இளைஞர்கள் மீது குற்றச்சாட்டுகள்...
ஆனால், பல ஆண்டுகளாகவே அங்குள்ள மக்கள் பிரித்தானிய இளைஞர்கள் மீது பல்வேறு மோசமான குற்றச்சாட்டுகளைக் கூறிவருகிறார்கள்.
பிரித்தானியர்கள் பொது இடங்களில் சிறுநீர் கழிப்பதாகவும், குடித்துவிட்டு கால்வாய்களில் வாந்தி எடுப்பதாகவும், உடைகளை கழற்றி நிர்வாணமாக அலைவதாகவும், குடித்துவிட்டு சண்டை போடுவதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
ஆம்ஸ்டர்டாம் மேயர் ஒருவர், முன்னாள் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சனிடம் வெளிப்படையாகவே இந்த குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளார்.
GETTY IMAGES
உண்மை நிலை என்ன?
பிரச்சினை இளைஞர்கள் அல்ல, இங்கு வரும் மக்களுடைய எண்ணிக்கை என்கிறார்கள் உள்ளூர் மக்கள். அதாவது, ஆம்ஸ்டர்டாமில் வாழும் மக்கள், அங்கு எப்போதும் சுற்றுலாப்பயணிகளின் கூட்டம் காணப்படுவதால், தாங்கள் உயிரியல் பூங்கா ஒன்றில் வாழ்வது போல் உணர்வதாக தெரிவிக்கிறார்கள்.
அதாவது, எப்போதும் சுற்றுலாப்பயணிகள் நடமாட்டம் இருந்துகொண்டிருப்பதால் அவர்களால் அமைதியாக இயல்பு வாழ்க்கை வாழமுடியவில்லை.
நரத்துக்குள் கஞ்சா புகைக்கும் விடுதிகளும், சிவப்பு விளக்குப் பகுதிகளும் இருப்பதால் சுற்றுலாப்பயணிகள் அங்கு படையெடுக்கிறார்கள்.
அது உள்ளூர் மக்களுக்குத் தொந்தரவாக உள்ளது. இப்படியிருக்கும் நிலையில், ஒரு குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்தவர்களை மட்டும் இலக்காக வைத்து அவமதிக்கும் வகையில் விளம்பரம் வெளியிடுவது சரியல்ல என்கிறார்கள் விமர்சகர்கள்.