சர்வதேச ஒருநாள் போட்டி! பங்களாதேஷ் அணி 50 ஓட்டங்களால் வெற்றி
இங்கிலாந்துக்கு எதிரான 3 ஆவதும் இறுதியுமான சர்வதேச ஒருநாள் போட்டியில் பங்களாதேஷ் அணி 50 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.
எனினும் முதலிரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி 2 க்கு 1 என்ற ஆட்டக்கணக்கில் இங்கிலாந்து அணி தொடரை கைப்பற்றியுள்ளது.
கிரிக்கெட் விஜயம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணிக்கும் பங்களாதேஷ் அணிக்கும் இடையிலான 3 ஆவது சர்வதேச ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது.
பங்களாதேஷ் அணி
இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 48.5 ஓவர்களில் 246 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
சிறப்பாக துடுப்பெடுத்தாடிய ஷஹீப் அல் ஹசன் 75 ஓட்டங்களையும் முஸ்ஃபிகூர் ரஹீம் 70 ஓட்டங்களையும் பெற்றதுடன், நஜிமுல் ஹுசைய்ன் ஷன்ரோ 53 ஓட்டங்களையும் குவித்தார்.
ஜொஃப்ரர் ஆச்சர் 3 விக்கெட்டுக்களையும் ஆதில் ரஷீட் 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.
இங்கிலாந்து அணி
247 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 43.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 196 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வி அடைந்துள்ளது.
ஜேம்ஸ் வின்ஸ் 38 ஓட்டங்களையும் ஃபிலிப் சோல்ட் 35 ஓட்டங்களையும் பெற்றதுடன், கிறிஸ் வோக்ஸ் 34 ஓட்டங்களைக் குவித்தார்.
ஷஹீப் அல் ஹசன் 4 விக்கெட்டுக்களை வீழ்த்தியதுடன், தஜியுல் இஸ்லாம் மற்றும் இபாதத் ஹொசைன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினர்.
போட்டியின் சிறப்பாட்டகாரராக ஷஹீப் அல் ஹசனும் தொடரின் சிறப்பாட்டகாரராக ஆதில் ரஷீட்டும் தெரிவுசெய்யப்பட்டனர்.