ஜேர்மனிக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் வருவாயை உருவாக்கும் வெளிநாட்டு மாணவர்கள்
வெளிநாட்டு மாணவர்கள் தங்கள் சொத்து என்கின்றது ஜேர்மனி. ஆம், வெளிநாட்டு மாணவர்கள் ஜேர்மனிக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் வருவாயை உருவாக்குகிறார்கள்.
வெளிநாட்டு மாணவர்கள் எங்கள் சொத்து
German Economic Institute (IW) என்னும் நிறுவனம் மேற்கொண்ட் ஆய்வு ஒன்று, வெளிநாட்டு மாணவர்கள் அல்லது சர்வதேச மாணவர்கள், பல்லாயிரம் கோடி பணத்தை ஜேர்மனிக்குக் கொண்டுவருவதன் மூலம் அந்நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தவும் உதவுவதாக தெரிவித்துள்ளது.
2022ஆம் ஆண்டில் ஜேர்மனிக்கு படிக்கவந்த 79,000 வெளிநாட்டு மாணவர்கள், தாங்கள் ஜேர்மனியில் வாழும் காலத்தில், வரிகள் மற்றும் சமூக பாதுகாப்பு பங்களிப்பின் மூலம் ஜேர்மனிக்கு 15.5 பில்லியன் யூரோக்கள் வருவாயை அளிக்க இருக்கிறார்கள் என்கிறது அந்த ஆய்வு. இலங்கை மதிப்பில் அது 49,82,16,50,00,000.00 ரூபாய் ஆகும்.
ஆய்வை முன்னின்று நடத்திய German Academic Exchange Service (DAAD) என்னும் அமைப்பின் தலைவரான Joybrato Mukherjee என்பவர், இந்த ஆய்வின் முடிவுகள், வெளிநாட்டு மாணவர்கள் ஜேர்மனியின் சொத்து என்பதைக் காட்டுகின்றன என்கிறார்.
ஏற்கனவே அவர்கள் கல்வி ரீதியில் ஜேர்மனியின் சொத்து, அத்துடன், பொருளாதார ரீதியிலும் அவர்கள் சொத்துதான் என்கிறார் அவர்.
சில நாடுகளுக்கு கல்வி கற்கச் செல்வோர் தொடர்ந்து பல ஆண்டுகள் அங்கேயே தங்குவதில்லை. ஆனால், ஜேர்மனியில் அப்படியல்ல.
2010ஆம் ஆண்டு மாணவர் விசா மூலம் ஜேர்மனிக்கு வந்தவர்களில் 45 சதவிகிதம் பேர், 10 ஆண்டுகளாகியும் ஜேர்மனியில்தான் வாழ்கிறார்கள். அந்த காலகட்டத்தில், ஜேர்மனி தங்கள் கல்விக்காக வழங்கிய நிதியை அவர்கள் வரிகளாக ஜேர்மனிக்குத் திருப்பிச் செலுத்திவிட்டார்கள்.
ஜேர்மனிக்கு கல்வி கற்க வரும் மாணவர்களில் 40 சதவிகிதம்பேர், தங்கள் படிப்பை முடித்தபிறகு மூன்று ஆண்டுகள் ஜேர்மனியில் வாழ்ந்தாலே, ஜேர்மனி அவர்களுடைய படிப்புக்காக செலவிடும் பணத்தை அவர்கள் வரிகள் மற்றும் சமூக பாதுகாப்பு பங்களிப்பின் மூலம் திருப்பிச் செலுத்திவிடலாம் என கணக்கிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |