பிரித்தானியாவுக்கு மீண்டும் பிரான்ஸ் தரப்பிலிருந்து விடுக்கப்பட்டுள்ள மிரட்டல்
பிரான்ஸ் மீனவர்கள் தரப்பிலிருந்து மீண்டும் பிரித்தானியாவுக்கு ஒரு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
வடக்கு பிரான்ஸ் மீனவர் கமிட்டி ஒன்றின் தலைவரான Olivier Lepretre என்பவர், நேற்றிரவு பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானுடன் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பின் இந்த மிரட்டலை விடுத்துள்ளார்.
பிரித்தானிய பிரதமர் அலுவலகம் சமரசத்துக்கு வரவில்லையென்றால், சில நாட்களுக்குள் பிரெஞ்சு மீனவர்கள் நடவடிக்கையில் இறங்கப்போவதாகவும், பிரித்தானியாவின் பொருளாதாரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தப்போவதாகவும் அவர் மிரட்டல் விடுத்துள்ளார்.
ஏற்கனவே, கலாயிஸ் துறைமுகத்தையும் சேனல் சுரங்கப்பாதையையும் மறிக்கப்போவதாகவும், ஐரோப்பாவிலிருந்து பிரித்தானியாவுக்கு பொருட்கள் போகவிடாமல் தடுக்கப்போவதாகவும் Lepretre மிரட்டல் விடுத்திருந்ததும், பின்னர் பிரான்ஸ் தரப்பு பின்வாங்கியதும் குறிப்பிடத்தக்கது.