மகளுடைய புகைப்படங்களை ஊடகங்களுக்கு அனுப்பிவிடுவோம்: சுவிட்சர்லாந்து பெண்மணிக்கு வந்த மிரட்டல்
தங்களுக்கு 70,000 சுவிஸ் ஃப்ராங்குகள் கொடுக்காவிட்டால் சுவிஸ் பெண்மணி ஒருவரின் மகளுடைய புகைப்படங்களை ஊடகங்களில் வெளியிட்டு விடுவதாக ஒரு கும்பல் மிரட்டியுள்ளது.
இந்த சம்பவம் Zug மாகாணத்தில் நடைபெற்றுள்ளது.
நடந்தது என்னவென்றால், பொலிசாருக்கு வங்கி ஒன்றிலிருந்து ஒரு அழைப்பு வந்துள்ளது. தங்கள் வாடிக்கையாளரான 81 வயது பெண்மணி ஒருவர் வழக்கத்துக்கு மாறாக பெரும் தொகை ஒன்றை எடுக்க முயல்வதாகவும், அவர் ஏதோ பிரச்சினையில் சிக்கியிருக்கலாம் என்றும் வங்கி ஊழியர்கள் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்கள்.
உடனடியாக பொலிசார் அங்கு விரைந்திருக்கிறார்கள். 70,000 சுவிஸ் ஃப்ராங்குகளுடன் அந்தப் பெண்மணி காத்திருக்க, ஒரு பெண் வந்து அவரிடமிருந்து பணத்தை வாங்கியிருக்கிறார்.
அந்தப் பெண் பணத்துடன் ஒரு காரில் ஏற, சட்டென அந்தக் காரை சுற்றி வளைத்திருக்கிறார்கள் பொலிசார். அந்த ஏமாற்றுக்காரப் பெண்ணும், அவருடனிருந்த ஆணும் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
விசாரித்ததில், இத்தாலியில் நடந்த விபத்தொன்றுடன் தன் மகளுக்கு தொடர்பிருப்பதாகவும், அது தொடர்பான புகைப்படங்கள் தங்களிடம் இருப்பதாகவும், 70,000 சுவிஸ் ஃப்ராங்குகள் கொடுக்காவிட்டால் அந்த புகைப்படங்களை ஊடகங்களில் வெளியிட்டு விடுவதாகவும் தன்னை ஒருவர் தொலைபேசியில் மிரட்டியதாக அந்தப் பெண்மணி தெரிவித்துள்ளார்.
அந்த வங்கி ஊழியர்களின் சமயோகித புத்தி மற்றும் வாடிக்கையாளர் மீதான அக்கறையால், அந்த பெண்மணி 70,000 சுவிஸ் ஃப்ராங்குகளை இழப்பதிலிருந்து தப்பியுள்ளதைப் பார்க்கும்போது, அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும் என்றே தோன்றுகிறது.