ஜூன் 20 முதல்... கனேடியர்களுக்கு கொரோனா தடுப்பூசி தொடர்பில் புதிய விதிகள் அறிமுகம்
கனடாவுக்குள்ளும், வெளியேயும் பயணிக்கும் கனேடியர்களுக்கு கொரோனா தடுப்பூசி கட்டாயம் என்ற விதி, ஜூன் 20 முதல் விலக்கிக்கொள்ளப்பட உள்ளது.
இந்த தகவலை நேற்று கனேடிய பெடரல் அரசு அதிகாரிகள் வெளியிட்டுள்ளார்கள்.
கொரோனா தொற்று வேகமாக குறைந்து வரும் நிலையில், பொதுமக்களில் 81 சதவிகிதம் பேர் வரை முழுமையாக தடுப்பூசியும் பெற்றுவிட்டதைத் தொடர்ந்து, எட்டு மாதங்களாக அமுலில் இருந்த கொரோனா தடுப்பூசி கட்டாயம் என்ற விதி, விலக்கிக்கொள்ளப்பட இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
அத்துடன், பெடரல் பணியாளர்கள் தடுப்பூசி பெற்றிருக்கவேண்டும் என்ற விதியும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
புதிய விதிகள், ஜூன் (இம்மாதம்) 20 ஆம் திகதி அமுலுக்கு வர உள்ளதாக Ottawa அமைச்சர்கள் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்கள்.
2021, அக்டோபர் 30 முதல், 12 வயதுக்கு மேற்பட்ட யாரானாலும், கனடாவில் விமானம் அல்லது ரயிலில் பயணிக்கவேண்டுமானால் அவர்கள் கொரோனா தடுப்பூசி பெற்றிருக்கவேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
தற்போது விதிகள் விலக்கிக்கொள்ளப்பட உள்ள நிலையிலும், பயணிகள் பயணத்தின்போது மாஸ்க் அணியவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையில், தடுப்பூசி பெறாத கனேடியர்கள் அமெரிக்கா உட்பட வெளிநாடுகளுக்குப் பயணிக்கும் நிலையில் அவர்கள் பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடலாம்.
அத்துடன், கனடாவுக்குள் நுழையும் தடுப்பூசி பெறாத கனேடியர்கள், தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்படவேண்டி வரலாம்.
கனேடியர் அல்லாதோரைப் பொறுத்தவரை, அவர்கள் கனடாவுக்குள் நுழையவேண்டுமானால் தடுப்பூசி பெற்றிருக்கவேண்டும், அல்லது, அவர்கள் கொரோனா சோதனைகளுக்குட்படுத்தப்படுவார்கள்.
இதுபோக, கப்பல் பயணங்களைப் பொருத்தவரை, அவர்களுக்கு தடுப்பூசி கட்டாயம் என்னும் விதி தொடரும் என அரசு அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.