வானத்திலிருந்து விழுந்த அபூர்வ பனிப்பாளம்... பிரான்ஸ் நகரமொன்றில் நீடிக்கும் மர்மம்
பிரான்சில் வீடு ஒன்றின் மேல் பனிப்பாளம் (பிரம்மாண்ட பனிக்கட்டித் துண்டு) ஒன்று விழுந்ததில், வீடு பலத்த சேதமடைந்துள்ளது. அந்த பனிப்பாளம் எங்கிருந்து விழுந்தது என்பது மர்மமாகவே நீடிக்கும் நிலையில், அதிகாரிகள் அது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். பிரான்சிலுள்ள Haute-Savoie பகுதியில் அமைந்துள்ள ஒரு வீட்டின் மீது, திடீரென பெரிய பனிக்கட்டித்துண்டு ஒன்று விழுந்துள்ளது.
அது விழுந்ததில் வீடு பலத்த சேதம் அடைந்தாலும், நல்ல வேளையாக யாருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. அந்த பனிக்கட்டித்துண்டு எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை. அது விமானம் ஒன்றிலிருந்து விழுந்திருக்க வாய்ப்பில்லை என்று கூறியுள்ள அதிகாரிகள், அது Megacryometeor என்னும் அபூர்வ வானியல் நிகழ்வாக இருக்கலாம் என்று கருதுகிறார்கள்.
Megacryometeor என்பவை, வானம் தெளிவாக இருக்கும் நிலையிலும் வானின் மேல் பகுதியில் உருவாகும் பனிப்பாளங்களாகும். 2000ஆம் ஆண்டுக்குப் பிறகு இதுபோல 50க்கும் மேற்பட்ட பனிப்பாளங்கள் விழுந்துள்ளன.
பிரேசிலில் 50 கிலோ எடையுள்ள ஒரு பனிப்பாளம் விழுந்துள்ளது. அதேபோல், ஸ்பெயின் தலைநகரமான மாட்ரிடில் அதே ஆண்டில் பல நாட்களாக தொடர்ந்து பல பனிப்பாளங்கள் விழுந்தது குறிப்பிடத்தக்கது.