ஆப்பிளின் மிக மெல்லிய ஸ்மார்ட்போன்: ஐபோன் 17 ஏர் குறித்து கசிந்த புதிய தகவல்கள்
ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த மெல்லிய ஸ்மார்ட்போனாக ஐபோன் 17 ஏர் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த புதிய ஐபோனின் பற்றரி மற்றும் எடை குறித்த சுவாரஸ்யமான தகவல்கள் ஆன்லைனில் கசிந்துள்ளன.
சமீபத்தில் வெளியான சாம்சங் கேலக்ஸி S25 எட்ஜ் போனை விட, ஐபோன் 17 ஏர் சிறிய பற்றரியை கொண்டிருந்தாலும், மிகவும் மெல்லியதாகவும், எடை குறைவாகவும் இருக்கும் என கூறப்படுகிறது.
இருப்பினும், இது பாரம்பரிய லித்தியம்-அயன் பற்றரிகளை விட அதிக ஆற்றலை வழங்கும் நவீன பற்றரி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தலாம்.
ஐபோன் 17 ஏர் குறித்த விவரங்கள்
X தளத்தில் @MajinBuOfficial என்ற பெயரில் அறியப்படும் ஒரு டிப்ஸ்டர், ஐபோன் 17 ஏர் சிலிக்கான்-கார்பன் பற்றரியை கொண்டிருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக வெளியான தகவல்களில், இந்த புதிய மெல்லிய ஐபோன் மாடலில் 2800mAh பற்றரி இருக்கலாம் என்று கூறப்பட்டது.
இது அடிப்படை ஐபோன் மாடல்களை விட சிறியது. ஆனால் சிலிக்கான்-கார்பன் பேட்டரியின் பயன்பாடு, ஐபோன் 17 ஏர் எதிர்பார்ப்பதை விட சிறந்த பற்றரி ஆயுளை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வரவிருக்கும் இந்த புதிய ஐபோன் மாடல் வெறும் 146 கிராம் எடையுடன் இருக்கும் என்று டிப்ஸ்டர் குறிப்பிட்டுள்ளார்.
கேமரா மற்றும் சிப்செட்
கேமராவைப் பொறுத்தவரை, ஐபோன் 17 ஏர் ஒற்றை 48MP பிரைமரி கேமரா மற்றும் 24MP செல்ஃபி கேமராவுடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஸ்மார்ட்போன் ஆப்பிளின் புதிய A19 சிப் கொண்டிருக்கும் என்றும், கடந்த ஆண்டு ஐபோன் 16 பிளஸ் மாடலைப் போலவே 8 ஜிபி ரேமுடன் வரக்கூடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், புதிய ஐபோனின் பின்புற பேனல் கண்ணாடியால் ஆனது என்றும், வயர்லெஸ் (மேக்சேஃப்) சார்ஜிங்கை ஆதரிக்கும் என்றும் டிப்ஸ்டர் கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |