கடைசி 2 பந்துகளில் 2 சிக்ஸர் அடித்தது எப்படி? ராகுல் திவாட்டியா விளக்கம்
ஐபிஎல்-லில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக நேற்று நடந்த போட்டியில், கடைசி இரண்டு பந்துகளில் இரண்டு சிக்ஸர் விளாசியது எப்படி என ராகுல் திவாட்டியா தெரிவித்துள்ளார்.
ஐபிஎல்-லின் 16வது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது. பரபரப்பாக நடந்த இந்த போட்டியில், குஜராத் அணியின் வெற்றிக்கு 2 பந்துகளில் 12 ஓட்டங்கள் தேவைப்பட்டது.
ஓடியன் ஸ்மித் விசீய அந்த ஓவரின்போது டேவிட் மில்லர், ராகுல் திவாட்டியா களத்தில் இருந்தனர். எனினும் ரசிகர்களின் எதிர்பார்ப்பு மில்லரின் மீதே இருந்தது. ஆனால் கடைசி ஓவரின் 5வது பந்தை திவாட்டியா எதிர்கொண்டார். யாரும் எதிர்பாராத விதமாக அவர் சிக்ஸர் அடிக்க ரசிகர்களின் புருவங்கள் உயர்ந்தன. அதனைத் தொடர்ந்து, அடுத்த பந்தையும் திவாட்டியா சிக்ஸருக்கு விளாச குஜராத் அணி த்ரில் வெற்றி பெற்றது.
போட்டிக்கு பின்னர் பேசிய திவாட்டியா, 'கடைசி நேரத்தில் யோசிக்க முடியவில்லை. ஆனால், சிக்ஸர்கள் அடிக்க வேண்டும் என்று நானும், டேவிட் மில்லரும் பேசிக் கொண்டோம். அந்த திட்டத்திற்கு ஏற்பவே விளையாடினேன். கடைசி பந்து பேட்டின் நடுவில்பட்டதுமே தெரிந்துவிட்டது அது சிக்ஸ்தான் என்று.
கடைசி பந்து எப்படி வரும் என்பதை முன்கூட்டியே பிளான் செய்தேன். எப்படி என்றால், ஓடியன் ஸ்மித் எனக்கு வீசிய முதல் பந்தை ஆஃப் சைடில் வைடு போல் வீசினார். அப்படி தான் மீண்டும் செய்வார் என கணித்தேன். அதற்கேற்ப நகர்ந்து ஆடி சிக்ஸர் அடித்தேன்' என தெரிவித்துள்ளார்.