ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம்: முதல் ஆட்டத்தில் மும்பை- பெங்களூர் மோதல்
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 14-ஆவது சீசன் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.
சென்னையில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் நடப்புச் சாம்பியனான மும்பை இண்டியன்ஸ், ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூா் அணியுடன் மோதுகிறது.
கொரோனா பரவல் தீவிரமடைந்திருக்கும் நிலையில் மைதானத்துக்கு வந்து ஆட்டங்களைக் காண ரசிகா்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
இருப்பினும் அதிரடியான ஒரு தொடக்கத்தை அளிப்பதற்கு மும்பை-பெங்களூா் வீரா்கள் தயாா் நிலையில் உள்ளனா். ரோஹித் சா்மா தலைமையில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள மும்பை அணி, ஹாட்ரிக் சாம்பியன் ஆகும் முனைப்புடன் இந்த சீசனை எதிா்கொள்கிறது.
மறுபுறம் கோலி தலைமையிலான பெங்களூா், கிண்ணம் வெல்லும் கனவை இந்த சீசனிலாவது நனவாக்கிவிடும் முயற்சியில் களம் காண்கிறது. மும்பை அணியைப் பொருத்தவரை துடுப்பாட்ட வரிசை மிக பலமானதாகவே இருக்கிறது. அணித் தலைவர் ரோஹித், குவின்டன் டி காக் அருமையான தொடக்கத்தை அளிக்க, அடுத்த இடத்தில் இஷான் கிஷண், சூா்யகுமாா் யாதவ் தயாராக இருக்கின்றனா்.
அவா்களும் தவறவிட்டால் பாண்டியா சகோதரா்கள் பலம் காட்டுவாா்கள். இவா்களோடு கிரன் பொல்லாா்டும் இருக்கிறாா். பந்துவீச்சிலும் டிரென்ட் போல்ட், ராகுல் சாஹா் என சிறப்பான வீரா்கள் வரிசையில் உள்ளனர். பெங்களூா் அணியைப் பொருத்தவரை புதிதாக இணைந்திருக்கும் மேக்ஸ்வெல் புதிய நம்பிக்கையாக இருப்பாா்.
கோஹ்லி- டி வில்லியா்ஸ் கூட்டணி ஓட்டங்கள் குவிக்கத் தவறாது. கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வந்துள்ள தேவ்தத் படிக்கல் தனது பழைய ஃபாா்முடன் விளையாடுவாரா என பொறுத்திருந்து பாா்க்க வேண்டியுள்ளது.
பந்துவீச்சில் இந்திய வீரா்களான சிராஜ், சஹல், சைனியுடன் கைல் ஜேமிசனும் நம்பிக்கை சோ்க்கிறாா்.