கடைசி ஓவரில் பஞ்சாப் த்ரில் வெற்றி! 6 போட்டிகளில் சென்னை தோல்வி
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரானப் போட்டியில் சென்னை அணி 11 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது.
ஐ.பி.எல் 2022 தொடரின் 38-வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ததை அடுத்து, பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களாக மயங்க் அகர்வால், ஷிகர் தவான் களமிறங்கினர்.
மயங்க் அகர்வால் 18 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் தீக்ஷானா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதனையடுத்து, ராஜபக்ச களமிறங்கினர். அவர் 32 பந்துகளில் 42 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார்.
மறுபுறம் தவன் நிதானமாக ஆடி ஓட்டங்களைக் குவித்தார். லிவிங்ஸ்டன் 19 ஓட்டங்கள் எடுத்தார். மறுபுறம் சிறப்பாக ஆடிய தவன் 59 பந்துகளில் 88 ஓட்டங்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 187 ஓட்டங்கள் எடுத்தது.
அதனையடுத்து, சென்னை அணியின் தொடக்க வீரர்களாக ரூத்ராஜ் கெய்க்வாட், ராபின் உத்தப்பா களமிறங்கினர். உத்தப்பா ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து, மிட்செல் சான்ட்னர் 9 ஓட்டங்களும், ஷிவம் துபே 8 ஓட்டங்களும் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தனர். ஐந்தாவதாக களமிறங்கிய அம்பதி ராயுடு அதிரடியாக ஆடி அணியின் எண்ணிக்கையை உயர்த்தினார்.
16-வது ஓவரை சந்தீப் சர்மா வீசினார். அந்த ஓவரை அடித்து வெளுத்தார் அம்பதி ராயுடு. அந்த ஓவரில் 3 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி என அடித்தார் ராயுடு. 39 பந்துகளில் 78 ஓட்டங்கள் எடுத்திருந்த ராயுடு ககிசோ ரபாடா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ஜடேஜா அதிரடியாக ஆடி ரன்களைக் குவிக்க தடுமாறிய நிலையில் 20-வது ஓவரில் 27 ஓட்டங்கள் தேவைப்பட்டது.
20-வது ஓவரை ரிஷி தவான் வீசினார். முதல் பந்தில் சிக்ஸ் அடித்து ரசிகர்களை உற்சாக மூட்டினார் தோனி. 2-வது பந்தில் தோனி ஓட்டம் ஏதும் எடுக்காத நிலையில் 3-வது பந்தை சிக்ஸ் அடிக்க முயன்றார் தோனி. அது கேட்சாக செல்ல ஃபேர்ஸ்டோ அதை லாவகமாகப் பிடித்தார்.
இறுதியில் 20 ஓவரில் சென்னை அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. அதன்மூலம் சென்னை அணி 11 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
8 போட்டிகளை எதிர்கொண்ட சென்னை அணி 6 போட்டிகளில் தோல்வியைத் தழுவியுள்ளது.