வார்னர், பாவெல் அதிரடி... ஐதராபாத் அணியை துவம்சம் செய்த டெல்லி
15வது ஐபிஎல் தொடரின் 50வது லீக் ஆட்டத்தில் டெல்லி அணி 21 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. நாணய சுழற்சியில் வென்ற ஐதராபாத் அணி பந்துவீச்சை தெரிவு செய்தது.
இதனையடுத்து டெல்லி அணி முதலில் துடுப்பாட்டத்தில் களமிறங்கியது. தொடக்கவீரர்களாக டேவிட் வார்னர், மந்தீப் சிங் களமிறங்கினர். முதல் ஓவரில் மந்தீப் சிங் ரன் எதுவும் எடுக்காமல் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
பின்னர் வந்த மிட்செல் மார்ஷ் 10 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார் . அடுத்து களமிறங்கிய அணித் தலைவர் ரிஷாப் பண்ட், வார்னருடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். விக்கெட்டுக்கள் இழந்தாலும் வார்னர் அதிரடியாக ஓட்டங்கள் குவித்தார்.
மறுபுறம் ரிஷாப் பண்ட் ஐதராபாத் அணியின் ஷ்ரேயாஸ் கோபால் வீசிய ஒரு ஓவரில் தொடர்ந்து 3 சிக்ஸர்,1 பவுண்டரி என பறக்க விட்டார். அதனை தொடர்ந்து அந்த ஓவரில் 26 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
சிறப்பாக விளையாடிய டேவிட் வார்னர் 33பந்துகளில் அரைசதம் அடித்தார். மறுபுறம் ரோவ்மன் பவல் அதிரடியாக விளையாட, வார்னர், பவல் இணைந்து ஐதராபாத் அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தனர், உம்ரான் மாலிக் வீசிய கடைசி ஓவரில் ரோவ்மன் பவல் 18 ஓட்டங்கள் குவித்து அரைசதம் கடந்தார்.
சிறப்பாக விளையாடிய வார்னர் 92 ஓட்டங்களிலும், பவல் 67 ஓட்டங்களிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இறுதியில் டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 207 ஓட்டங்கள் எடுத்தது. தொடர்ந்து 208 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணி களமிறங்கியது.
தொடக்க வீரர்களாக களமிறங்கிய அபிஷேக் சர்மா 7 ஓட்டங்களிலும், அணித் தலைவர் கேன் வில்லியம்சன் 4 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். பின்னர் வந்த ராகுல் திரிபாதி 22 ஓட்டங்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
அடுத்து வந்த நிக்கோலஸ் பூரன், ஐடன் மார்க்ரம் நிலைத்து ஆடி ஓட்டங்களை சேர்த்தனர். பந்துகளை பவுண்டரி சிக்சருக்கு பறக்க விட்டனர். சிறப்பாக விளையாடிய மார்க்ரம் 42 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
விக்கெட்டுக்களை இழந்தாலும் அதிரடி ஆட்டத்தை விடாத நிக்கோலஸ் பூரன், கடைசி 3 ஓவரில் 55 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில் 62 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழக்க, இறுதியில் ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிறகு 186 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.
இதனால் டெல்லி அணி 21 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியால் டெல்லி அணி 5 வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் 5 வது இடத்துக்கு முன்னேறியது.