ஐபிஎல் போட்டிகளில் புதிய மாற்றம் - போட்டி தொடங்கும் தேதி அறிவிப்பு
15வது ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதியை பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஐபிஎல் தொடரில் ஏற்கனவே உள்ள சென்னை, மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத்,டெல்லி, பஞ்சாப், ராஜஸ்தான், பெங்களூரு ஆகிய அணிகளுடன் லக்னோ, குஜராத் ஆகிய அணிகள் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் வீரர்களின் மெகா ஏலம் பிப்ரவரி 12, 13 ஆகிய தேதிகளில் பெங்களூருவில் நடந்து முடிந்தது. இதில் ஒவ்வொரு அணியும் தங்களுக்கு தேவையான வீரர்களை ஏலத்தில் போட்டிப் போட்டு எடுத்தது.
இந்நிலையில் 15வது ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதியை பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி மார்ச் 26 ஆம் தேதி தொடங்கும் ஐபிஎல் தொடர் மே 29ஆம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் குரூப் ஏ பிரிவில் மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா, ராஜஸ்தான், டெல்லி, லக்னோ ஆகிய அணிகளும், குரூப் பி பிரிவில் சென்னை சூப்பர் கிங்ஸ், ஐதராபாத், பெங்களூரு, பஞ்சாப், குஜராத் ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன.
ஒவ்வொரு அணியும் தங்களது குரூப்பில் உள்ள அணிகளுடன் 2 முறையும், எதிர் குரூப்பில் உள்ள அணிகளுடன் தலா ஒரு முறையும் மோத வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இதனால் நடப்பாண்டு ஐபிஎல் போட்டியின் சுவாரஸ்யம் கூடுதலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.