கே.எல்.ராகுல், தீபக் ஹூடா அதிரடி! சன்ரைசர்ஸுக்கு சவாலான இலக்கை நிர்ணயித்த லக்னோ
ஐபிஎல் 15வது சீசனின் இன்றைய ஆட்டத்தில் லக்னோ அணி அபாரமாக விளையாடி சன்ரைசர்ஸ் அணிக்கு சவாலான இலக்கை நிர்ணயித்துள்ளது.
மும்பை டி.ஒய்.பாட்டீல் ஸ்டேடியத்தில் நடைபெற்றுவரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 12-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி, பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில், லக்னோ அணி முதலில் துடுப்பாட தொடங்கியது.
லக்னோ அணியின் துவக்க வீரராக களமிறங்கிய கேப்டன் கே.எல்.ராகுல், ஐதராபாத் பந்துவீச்சை நேர்த்தியாக எதிர்கொண்டு, ஓட்டங்களை குவித்தார். அதேசமயம் மறுமுனையில் குயின்டன் டி காக், எவின் லெவிஸ் தலா 1 ஓட்டம், மணீஷ் பாண்டே 11 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.
அவர்களைத் தொடர்ந்து கே.எல்.ராகுலுடன் தீபக் ஹூடா இணைய, அணியின் எண்ணிக்கை வேகமாக உயர்ந்தது. இருவரும் அரை சதம் கடந்து நம்பிக்கை அளித்தனர். தீபக் ஹூடா 51 ஓட்டங்களிலும், கே.எல்.ராகுல் 68 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.
அதன்பின்னர், க்ருணால் பாண்டியா 6 ஓட்டங்களில் வெளியேறினார். இறுதியில் 19 ஓட்டங்கள் எடுத்த ஆயுஷ் பதோனி, ஆட்டத்தின் கடைசி பந்தில் ரன் அவுட் ஆக, லக்னோ அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 169 ஓட்டங்கள் சேர்த்தது.
ஜேசன் ஹோல்டர் 8 ஓட்டங்களுடன் களத்தில் இருந்தார். சன்ரைசர்ஸ் தரப்பில் வாஷிங்டன் சுந்தர், ரொமாரியோ ஷெப்பர்டு, நடராஜன் தலா 2 விக்கெட் எடுத்தனர்.
இதையடுத்து 170 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி களமிறங்குகிறது.