ஐபிஎல் தொடர் நிறுத்தமா? பிசிசிஐ அவசர ஆலோசனை!
ஐபிஎல் தொடரில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதால், போட்டிகள் பாதியிலேயே நிறுத்தப்படும் சூழல் உருவாகியுள்ளது.
கடந்த மார்ச் 26ம் தேதி 2022 ஐபிஎல் மெகா தொடர் தொடங்கியது. நான்கு வாரங்களாக இந்த தொடர் சுவாரஸ்யத்துடன் நடைபெற்று வரும் நிலையில், டெல்லி அணியில் விளையாடும் ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் மார்ஷுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, ஒட்டுமொத்த அணியும் தனிமைபடுத்தப்பட்டுள்ளனர். அடுத்த போட்டிக்கான அனைத்து பயிற்சிகளும் நிறுத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக, சமூக வலைதளங்கள் முழுவதும் ஐபிஎல் தொடரை உடனடியாக ரத்து செய்ய வேண்டும், பணத்தை பெரிதாக கருதி ரத்து செய்யாமல் இருந்தால் பல முன்னணி வீரர்களுக்கும் தொற்று ஏற்படும் அபாயம் உருவாகும் என ரசிகர்களும், வல்லுநர்களும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்காக பிசிசிஐ சார்பில் அவசர அவசரமாக ஆலோசனைக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என தெரிகிறது.
கடந்த சீசனிலும் இதே போன்று கொரோனா பாதிப்பு ஏற்பட்டு பாதியிலேயே போட்டிகள் நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.