கோலி நன்றாகத்தான் விளையாடினார்... ஆனால்- தோல்வி குறித்து பேசிய கேப்டன் டூப்ளெஸ்ஸி
ஐபிஎல் தொடர் நேற்று விளையாடிய குஜராத் அணிக்கு எதிரான பெங்களூரு அணி தோல்வி குறித்து கேப்டன் டூப்ளெஸ்ஸி மனம் திறந்து பேசியுள்ளார்.
பெங்களூருவை வீழ்த்தி ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறிய குஜராத்
16வது ஐபிஎல் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. பிளே ஆப் சுற்றுக்காக நேற்று கடைசி லீக் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் குஜராத் அணியும், பெங்களூரு அணியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இப்போட்டியில் முதலில் துடுப்பாட்டம் செய்த பெங்களூரு அணி 197 ஓட்டங்கள் எடுத்தது.
இதனையடுத்து, 198 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி இறங்கியது. ஆனால், சுப்மன் கில் அசத்தலான ஆட்டத்தால் 6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூருவை வீழ்த்தி குஜராத் அணி வெற்றி பெற்றது. இதனால், பெங்களூரு அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறியுள்ளது.
விராட் கோலி மாஸாக விளையாடி சதம் அடித்தும் பெங்களூரு அணி தோல்வி அடைந்தது ரசிகர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மனம் திறந்த கேப்டன் டூப்ளெஸ்ஸி
இந்நிலையில், தோல்விக்கான காரணம் குறித்து பெங்களூரு அணி கேப்டன் டூப்ளெஸ்ஸி பேசுகையில், இந்த தோல்வி எங்களுக்கு ஏமாற்றம்தான். விராட் கோலி ரொம்பபே அற்புதமாக விளையாடி சதம் அடித்தார். எங்கள் அணிக்கு வெற்றிப் பாதையை ஏற்படுத்திக் கொடுத்தார்.
@rahulmsd_91
இந்த ஐபிஎல் தொடர் முழுவதும் அவர் நன்றாகவே விளையாடினார். நாங்கள் கில் விக்கெட்டை வீழ்த்தி இருக்க வேண்டும். டெத் ஓவர்களில் நாங்கள் சரியாக விளையாடவில்லை. கடந்த ஐபிஎல் தொடரில் தினேஷ் கார்த்திக் திறமையாக விளையாடினார். இந்த சீசனில் அவர் சிறப்பாக விளையாடவில்லை. எங்களுக்கு அந்த இடம் தொடர் முழுவதும் சரியாக அமையவில்லை என்றார்.
தற்போது, லீக் ஆட்ட முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில், ப்ளே ஆப் சுற்றுக்கு குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய 4 அணிகள் முன்னேறி இருக்கின்றன.