சேப்பாக்கத்தில் சென்னை படுதோல்வி: 10 ஓவரிலேயே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அபார வெற்றி!
சேப்பாக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-ஐ வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அபார வெற்றி பெற்றுள்ளது.
சென்னை-கொல்கத்தா மோதல்
நடப்பு ஐபிஎல் தொடரின் பரபரப்பான 25-வது லீக் ஆட்டத்தில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியை எதிர்த்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணி மோதியது.
இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது.
சென்னை அணியின் தொடக்க வீரர்களாக கான்வே மற்றும் ரச்சின் ரவீந்திரா களமிறங்கினர்.
சென்னை அணியின் தொடக்க ஆட்டம் சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 4-வது ஓவரிலேயே கான்வே 12 ஓட்டங்களில் அவுட் ஆனார்.
அவரை தொடர்ந்து அடுத்த ஓவரிலேயே ரச்சின் ரவீந்திரா 4 ஓட்டங்களில் ராணா பந்து வீச்சில் வெளியேறினார்.
இதனால் சென்னை அணியின் தொடக்கம் மோசமாக அமைந்ததோடு, முதல் 6 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து வெறும் 31 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து இருந்தது.
இவர்களை தொடர்ந்து வந்த வீரர்களும் சொற்ப ஓட்டங்களில் வெளியேற சென்னை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 103 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.
அதிகபட்சமாக ஷிவம் துபே 31 ஓட்டங்கள் குவித்தார்.
கொல்கத்தா அபார வெற்றி
இதையடுத்து 104 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கியது.
டிகாக் 23 ஓட்டங்களிலும், சுனில் நரேன் 44 ஓட்டங்களிலும் அவுட் ஆனார்கள்.
பின்னர் வந்த ரஹானே 20 ஓட்டங்களும், ரிங்கு சிங் 15 ஓட்டங்களும் எடுத்த அணியை 10.1 ஓவரிலேயே வெற்றி பெற செய்தனர்.
சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக இந்த சீசனில் இருந்து விலகியதால், இந்த போட்டியில் சென்னை அணியை தோனி வழி நடத்தியது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |