திரையரங்குகளிலும் IPL போட்டிகளை பார்க்கலாம் - பிசிசிஐ உடன் PVR Inox ஒப்பந்தம்
ஐபிஎல் போட்டிகளை PVR Inox நிறுவனம் திரையரங்குகளில் ஒளிபரப்ப உள்ளது.
2025 ஐபிஎல் தொடர்
ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும், 18 வது ஐபிஎல் தொடர் இன்று தொடங்கி மே 25 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
ரசிகர்கள் இந்த போட்டிகளை மைதானத்திற்கு நேரில் சென்று காண ஆவலாக உள்ளனர். ஆனால் அனைத்து ரசிகர்களுக்கும் டிக்கெட் கிடைப்பதில்லை.
டிக்கெட் கிடைக்காதவர்களுக்கும், மைதானத்தில் போட்டியை காண்பது போன்ற பார்வை அனுபவத்தை வழங்க, இந்தியாவின் 50 நகரங்களில் ஐபிஎல் ரசிகர் பூங்காக்களை பிசிசிஐ திறக்கிறது.
மேலும், ரசிகர்கள் டிவி மற்றும் மொபைல் செயலியில் இந்த போட்டிகளை காண முடியும். ஒவ்வொரு ஆண்டும், செயலியில் பார்ப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது.
PVR Inox திரையரங்கில் IPL
தற்போது, திரைப்படங்களை காண்பது போல், கிரிக்கெட் ரசிகர்கள் ஐபிஎல் போட்டிகளை திரையரங்கில் காண்பதற்கான ஏற்பாடுகளை PVR Inox நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இதற்காக பிசிசிஐ உடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
இது குறித்து பேசிய நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி, "ஐபிஎல் திரையிடல் மூலம் இந்தியாவின் இரண்டு சிறந்த ஆர்வங்களான சினிமா மற்றும் கிரிக்கெட்டை ஒன்றிணைப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்.
கடந்த ஆண்டு, ஐபிஎல் போட்டிகளை திரையிட்ட போதும், பார்வையாளர்களிடமிருந்து நல்ல வரவேற்பை பெற்றோம். இது இந்த முயற்சியின் வெற்றியை உறுதிப்படுத்துகிறது. இதே போல் இந்த ஆண்டும் பார்வையாளர்களுக்கு உயர் ரக ஒலி ஒளியுடன் கூடிய சிறந்த பார்வை அனுபவத்தை வழங்க உள்ளோம்" என தெரிவித்துள்ளார்.
சென்னையில் இல்லை
நாட்டின் அனைத்து முன்னணி நகரங்கள் மற்றும் இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களிலும் உள்ள PVR INOX திரையரங்குகளிலும் ஐபிஎல் போட்டிகளை நேரலையில் பார்க்கலாம்.
வட இந்தியாவின் பல்வேறு நகரங்களிலும், தென் இந்தியாவில் ஐதராபாத் ,பெங்களூர், கொச்சி, விசாகப்பட்டினம், விஜயவாடா, திருவனந்தபுரம் ஆகிய நகரங்களில் உள்ள PVR INOX திரையரங்குகளில் காண முடியும்.
சென்னையில் ஒளிபரப்புவது தொடர்பாக தற்போது வரை எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |