ஐபிஎல் ஏலம்! கோடிகளை அள்ளும் இலங்கை வீரர் உள்ளிட்ட வீரர்கள்... சம்பளம் எப்படி வழங்கப்படும் தெரியுமா?
ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் வீரர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் தொடர்பில் முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
ஐபிஎல் 2022 சீசனுக்கான வீரர்கள் ஏலம் மெகா அளவில் பெங்களூருவில் 2 நாட்கள் நடைபெற்று முடிந்துள்ளது. மொத்தம் 590 வீரர்கள் பங்கேற்ற போதிலும் இந்த ஏலத்தின் இறுதியில் 204 வீரர்கள் மட்டுமே 551 கோடி ரூபாய்கள் செலவில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்.
தீபக் சஹர், லியாம் லிவிங்ஸ்டன், நிக்கோலஸ் பூரான், ஷார்துல் தாகூர், வனிந்து ஹசரங்கா போன்ற நட்சத்திர வீரர்கள் ரூ 10 கோடிக்கு மேல் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
இப்படி லட்சம் முதல் கோடிகள் வரை ஒப்பந்தமாகும் கிரிக்கெட் வீரர்களுக்கு எப்படி சம்பளம் வழங்கப்படும் தெரியுமா?
ஏல ஒப்பந்தத்தின்படி வாங்கப்படும் வீரர்களுக்கு அந்த சம்பளத் தொகை வழங்கப்படும் என்றாலும் அதற்கான வரித்தொகை என்பது தொகைக்கு ஏற்ப பிடிக்கப்படும்.
ஒப்பந்தத்தில் எடுக்கப்படும் வீரருக்கு வழங்கப்படும் சம்பளம் அவருக்கு மட்டுமே சேரும்.
வீரர்களுக்கு வழங்கப்படும் சம்பள தொகையானது இந்திய ரூபாயில் வழங்கப்படும். முன்னதாக கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் 2012 வரை நடந்த ஏலத்தில் வீரர்களுக்கான சம்பளம் அமெரிக்க டாலர் மதிப்பில் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஒரு வீரர் ஒரு சீசனில் ஒரு குறிப்பிட்ட தொகைக்கு விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டு விட்டால் அவர் களத்தில் இறங்கி விளையாடினாலும் விளையாடா விட்டாலும் அவருக்கு ஒப்பந்தப்படி சம்பளம் வழங்க வேண்டும்.
அதேபோல் ஒரு சீசன் துவங்குவதற்கு முன்பாக ஒரு வீரர் விலக விரும்பினால் அதை அணி நிர்வாகத்திடம் தெரிவிக்கலாம். அந்த வகையில் அவரை விடுவிக்க அந்த அணி நிர்வாகம் நினைத்தால் அவருக்கு சம்பளத்தை கொடுக்க வேண்டும்.